ஏழை வன்னியர்களின் ரத்தத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் உறிஞ்சி குடித்துவிட்டு அவர்களை இப்போது ஏமாற்றிவிட்டார் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். 

ஏழை வன்னியர்களின் ரத்தத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் உறிஞ்சி குடித்துவிட்டு அவர்களை இப்போது ஏமாற்றிவிட்டார் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நெருங்கும் வேளையில் பாமகவிற்கு எதிராக உரக்க முழங்கி வருகிறார் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ’’வன்னியர் அறக்கட்டளை சொத்துக்கள் எல்லாம் கஷ்டப்பட்டு சேர்க்கப்பட்டது. எந்த பணமும் வானத்தில் இருந்து கொட்டவில்லை. அவை எல்லாம் ஏழை வன்னியர்களின் முயற்சியால் சேர்க்கப்பட்டவை. வன்னியர் சங்கத்தை தாம்தான் உருவாக்கியது போன்ற மாயத்தோற்றத்தை ராமதாஸ் உருவாக்கிவிட்டார். 

வன்னியர்களுக்கு உழைத்த தலைவர்கள் பலர் குறித்த தகவல்கள் ராமதாஸால் மறைக்கப்பட்டுள்ளது. வன்னிய மக்களின் ரத்தத்தை உறிஞ்சி அதனை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தியவர் ராமதாஸ். அவரது மகனும் மக்களின் பணிகளை மறந்துவிட்டு இப்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்து இருக்கிறார்கள். ஏழை வன்னியர்கள் கொடுத்த அண்டா, குண்டா மூலமே வன்னியர் அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. ராமதாஸ் ஒன்றும் வன்னியர் சங்கத்தை வானத்தில் இருந்து உருவாக்கவில்லை. 

ஒரு காலத்தில் ஒன்றரை ஏக்கர் நிலம் மட்டும் ராமதாஸுக்கு இருந்தது. ஆனால் இப்போது ராமதாஸ் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலத்திற்கு சொந்தக்காரர். தன்னை கொல்ல திட்டம் தீட்டியதாக ராமதாஸ் மீது அமைச்சர் சிவி.சண்முகம் புகார் கூறியுள்ளார். அவர்களை சேர்த்து அதிமுக கஷ்டப்பட்டு பேச்சுவார்த்தை நடத்துகிறது. ஆனால் இரண்டு தரப்பிற்குமே இதில் எந்த விதமான விருப்பமும் கிடையாது. 

முதல்வராக கருணாநிதி இருந்தபோதுதான் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்தது. வன்னியர்களுக்கு அதிமுகவும், பாமகவும் எதுவும் செய்யவில்லை. வன்னியர் அறக்கட்டளை சொத்துக்கள் குறித்து ராமதாஸ் பேச முடியுமா?’’ என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.