ramadoss blames minister in ashok kumar suicide
தர்மயுத்தம் நடத்திய அமைச்சரின் வாரிசு மூலம் சினிமா துறையில் முதலீடு செய்யப்படும் பலநூறு கோடி கறுப்புப் பணத்தை அன்புச்செழியன் நிர்வகித்துவருவதாக கூறப்படுவதாகவும் அதனால் அன்புச்செழியன் மீது வழக்கு பாயாது எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் அப்பட்டமாக குற்றம்சாட்டியுள்ளார்.
அன்புச்செழியன் என்பவரது கந்துவட்டி கொடுமையால் தான் தற்கொலை செய்துகொள்வதாக கடிதம் எழுதிவைத்துவிட்டு அசோக்குமார் என்ற தயாரிப்பாளர் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் சினிமா துறையினரிடையே பெரும் அதிர்வலைகளையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திரைப்படத் தயாரிப்புக்காக கந்துவட்டிக்கு கடன் கொடுத்த அன்புச் செழியன் என்ற கந்துவட்டிக்காரர் அவமானப்படுத்தியதால், அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அசோக் குமார் என்ற தயாரிப்பாளர் தற்கொலை செய்து கொண்டதாக வெளியான செய்தி அதிர்ச்சியளிக்கிறது. பார்ப்பதற்கு பிரகாசமாக தெரியும் திரையுலகில் நடைபெறும் அதிர்ச்சிகரமான இருட்டு நிகழ்வுகளுக்கு இது ஒரு உதாரணமாகும்.
தமிழ்த் திரையுலகின் ஆகச் சிறந்த வில்லன் கந்துவட்டியும், கந்துவட்டிக்கு கடன் தருபவர்களும் தான். திரையுலகில் கதாநாயகனாக இருப்பவர்கள் கூட இந்த வில்லனிடம் கைக்கட்டித் தான் நின்றாக வேண்டும். இதற்கு முன் கடந்த 2003ம் ஆண்டு தமிழ்த் திரையுலகில் கொடி கட்டி பறந்த ஜி.வி என்ற தயாரிப்பாளர் கந்துவட்டிக்கு வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாததற்காக இழைக்கப்பட்ட அவமானங்களை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்.
அவரைப் போலவே இப்போது அசோக் குமாரும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த இரு நிகழ்வுகளுக்கு இடைப்பட்ட 15 ஆண்டுகளில் கந்துவட்டியால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் அதிகமாக இருக்கும். ஆனால், அவர்கள் அவ்வளவு பிரபலமானவர்கள் இல்லை என்பதால் அதுகுறித்த விவரங்கள் வெளிவரவில்லை. தயாரிப்பாளர்கள் ஜி.வி., அசோக்குமார் ஆகிய இருவரின் தற்கொலைகளுக்கும் மூல காரணமாக இருந்தவர் அன்புச் செழியன் தான் என்று கூறப்படுகிறது.

ஆனாலும், அவர் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. ஜி.வி தற்கொலைக்காக அவர் மீது வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. அன்புச்செழியனின் கொடுமையால் ஏராளமான தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் கதாநாயகர்கள் அவமதிப்புக்கும், தாக்குதலுக்கும் ஆளாகியிருக்கின்றனர். மதுரையில் ஒரு தயாரிப்பாளர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டாலும் கூட அவருக்கு எதிரான வழக்கு வலுவிழக்கச் செய்யப்பட்டு விட்டது. இத்தனைக்கும் காரணம் இரு திராவிடக் கட்சிகளையும் சேர்ந்த முக்கியப் புள்ளிகளின் கருப்புப் பணத்தை திரையுலகில் முதலீடு செய்து பெரும் லாபம் ஈட்டித் தரும் பணியை அவர் செய்து வந்தது தான் எனக் கூறப்படுகிறது.
இப்போது கூட அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அன்புச் செழியன் மீது மிகவும் சாதாரணப் பிரிவில் தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அசோக்குமாரின் தற்கொலைக்கு காரணம் கந்துவட்டித் தான் என்பது ஒட்டுமொத்த தமிழகத்திற்கே தெரிந்திருந்தாலும் அதற்கு காரணமானவர் மீது கந்துவட்டிச் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. இத்தனைக்கும் காரணம் தமிழக அமைச்சராக இருக்கும் உத்தமர் ஒருவரின் தலையீடு தான் என்று கூறப்படுகிறது. தர்மயுத்தம் நடத்திய அந்த அமைச்சரின் வாரிசு மூலம் பலநூறு கோடி கருப்புப்பணம் திரையுலகில் முதலீடு செய்யப்பட்டிருப்பதாகவும் அப்பணத்தை அன்புச்செழியன் தான் நிர்வகித்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதனால் அசோக்குமார் தற்கொலை வழக்கிலும் அவர் மீது நடவடிக்கை பாயாது என்றே தெரிகிறது.
அசோக்குமாரின் தற்கொலைக்குக் காரணமான அன்புச்செழியனை கைது செய்து கடும் தண்டனை பெற்றுத்தரவும், அவரது கடந்த கால அட்டகாசங்கள் குறித்து விசாரிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
