இந்திரா காந்தி இலங்கைக்கு தாரை வார்த்ததும், தமிழகத்தை ஆண்ட தி.மு.க. வழக்குகளுக்கு அஞ்சி அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்ததும்தான் என கச்சத்தீவு விவகாரம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார் ராமதாஸ்.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 3000க்கும் மேற்பட்ட மீனவர்கள் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் நேற்று காலையில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். நேற்று இரவு கச்சத்தீவை ஒட்டியுள்ள பகுதியில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு இலங்கை கடற்படையினர் ரோந்து வந்துள்ளனர். அப்போது தமிழக மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தடுத்துள்ளனர். பின்னர், எல்லை தாண்டி வந்ததாகக் கூறி 11 மீனவர்களைக் கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். கச்சத்தீவை ஒட்டிய பகுதிகளில் மீன் பிடிப்பதற்கான பாரம்பரிய உரிமை தமிழக மீனவர்களுக்கு உண்டு, அவ்வாறு இருக்கும்போது கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்திருப்பது அத்துமீறலாகும் என்று கண்டித்துள்ளார் ராமதாஸ்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “சிங்களக் கடற்படையினரின் அத்துமீறலும், அட்டகாசமும் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டியவை; முடிவு கட்டப்பட வேண்டியவை. மத்திய, மாநில அரசுகள் கொடுத்த அழுத்தம் காரணமாக தமிழக மீனவர்களை கைது செய்வதை கடந்த சில வாரங்களாக இலங்கை படைகள் நிறுத்தி வைத்திருந்தன. அதுமட்டுமின்றி, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்களையும் இலங்கை அரசு அண்மையில் நிபந்தனையின்றி விடுதலை செய்தது.

கடந்த 35 ஆண்டுகளில் சிங்களக் கடற்படையினரால் 800க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் தாக்குதலுக்கும், கைது நடவடிக்கைகளுக்கும் ஆளாகியுள்ளனர். இவ்வளவு பாதிப்புகளுக்கும் காரணம் 1974-ஆம் ஆண்டில் தமிழகத்துக்குச் சொந்தமான கச்சத்தீவை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி இலங்கைக்கு தாரை வார்த்ததும், தமிழகத்தை ஆண்ட தி.மு.க. வழக்குகளுக்கு அஞ்சி அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்ததும்தான்” என்று கூறியுள்ளார்.