எல்லாருக்கும் சேர்த்துதானே வாங்கிக் கொடுத்தோம்! எங்களை மட்டும் ஏன்யா ‘சாதி கட்சி’ன்னு திட்டுறீங்க?: ரெளத்திர ராமதாஸ்

இந்திய தேர்தல் கமிஷன் கூட இன்னமும்  எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலை பற்றி சிந்திக்க துவங்கவில்லை. ஆனால், பாட்டாளி மக்கள் கட்சியோ மிக முழு வீச்சில் தன்னை ரெடி செய்ய துவங்கிவிட்டது. அதுவும் சாதாரணமாக இல்லை, ‘எந்த கூட்டணியோ, எந்த தலைமையோ, நாம எண்பது லட்சம் ஓட்டு வாங்கியே ஆகணும். அமைச்சர், ஆட்சியில் பங்குங்கிற கச்சேரியை அப்புறம் பார்த்துக்கலாம்!’ என்று தாறுமாறான கணக்கை போட்டு, கன்னாபின்னான்னு களமிறங்கிவிட்டது.

இதற்காகத்தான் வட தமிழகத்தில் எண்பத்து ஏழு தொகுதிகளை தேர்வு செய்து, ஒவ்வொரு தொகுதியிலும் சிந்தாமல் சிதறாமல் குறைந்தது ஒரு லட்சம் வாக்குகளை வாங்கியே ஆகணும் எனும் வெறியுடன் சில திட்டங்களை ஸ்கெட்ச் போட்டு தூக்க துவங்கியுள்ளது. 
இது தொடர்பான அறிக்கைகள், அறிவிப்புகள், திட்டவிளக்கங்கள், விவரிப்பு வகுப்புகள் என்று அக்கட்சி போய்க் கொண்டிருப்பது கொஞ்சம் கொஞ்சமாக வெளியே தெரிய துவங்கியுள்ளது. 

இது பற்றி, ஒரு காலத்தில் பா.ம.க.வில் கோலோச்சிவிட்டு பின் பிரிந்து அ.தி.மு.க.வில் சில அதிகாரங்களை  பார்த்துவிட்டு, சமீபத்தில் ராமதாஸின் பிறந்தநாளன்று மீண்டும் பா.ம.க.வில் ஐக்கியமாகி இருக்கும் தீரனோ இதையெல்லாம் எந்த ரகசியமும் இல்லாமல் உடைத்துப் பேசுகிறார் இப்படி....

“பா.ம.க. எப்பவுமே, எதிலுமே வித்தியாசமான, ஆக்கப்பூர்வமான ஒரு அரசியல் இயக்கம்தான் (ஓஹோ? அ.தி.மு.க.வுல இருந்தப்ப இது தெரியலையா?). எங்கள் இயக்கம் சார்பாக எண்பத்து ஏழு தொகுதிகளில் அன்புமணி தம்பிகள் படை, தங்கைகள் படைன்னு உருவாக்க இருக்கிறோம். இதில் சேரக்கூடியவர்களுக்கு உறுப்பினர் அட்டைக்கு கட்டணம் ஏதும் கிடையாது (எவ்ளோ பெரிய சலுகை!).

பா.ம.க.விடம் அதிகாரம் வரும்போது அனைத்து மக்களுக்கும் மனசாட்சிப்படி தேவையானதை செய்வதுதான் எங்கள் நோக்கம். இதை நோக்கித்தான் நாங்கள் பாடுபடுகிறோம். பா.ம.க. நடத்திய இட ஒதுக்கீட்டு போராட்டத்தால் வன்னியர்கள் மட்டுமா பயனடைந்தார்கள்? நூற்று இருபத்தெட்டு ஜாதிகளுக்கு தேவையானதைத்தான் நாங்கள் கேட்டு வாங்கிக் கொடுத்திருக்கிறோம். இத்தனை சாதிகளுக்கு நன்மை செய்திருக்கும் எங்கள் கட்சியை, வெறும் ஒரு சாதிக்கான கட்சியாக வேண்டுமென்றே விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள். இது பொய் விமர்சனம் என்பது அவர்களுக்கே தெரியும். ஆனாலும் வெற்று அரசியலுக்காக இதை செய்கிறார்கள். 

மருத்துவர் அய்யா (ராமதாஸேதான்)வுக்கு இதுதான் வருத்தம்.  ‘நூற்று இருபத்தெட்டு சாதி என்றால், எத்தனை எத்தனை லட்சம் பேர்! இத்தனை பேருக்காக போராடி உரிமைகளை வாங்கியிருக்கும் நம்மைப் பார்த்து சாதிக்கட்சி! என்கிறார்களே!’ என்று வருந்துகிறார். 
இந்த நிலை மாறணும், அந்த மாற்றத்தை தேர்தல்தான் கொண்டு வரும்.” என்கிறார். நம்பிக்கை! அதானே எல்லாமும்.