ராமர் பாலத்தை அகற்ற முடியாது என்றும், வேறு பாதையில் சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

தமிழகத்தின் ராமேஸ்வரம் அமைந்துள்ள பாம்பன் தீவுகளின் தனுஷ்கோடி பகுதியில் இருந்து அருகே உள்ள நீண்ட பகுதியான இலங்கையின் மன்னார் வளைகுடா வரை
மேடான பகுதியாக ராமர் பாலம் திகழ்கிறது. இது, சுண்ணாம்புக் கற்களால் ஆனது என்கிறார்கள். எனவே இது இயற்கையாக உருவானதுதான் என்று சிலர் கூறுகின்றனர். 

ராமாயாண காலத்தில், ராவணனால் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையை மீட்க, ராமர் தன் வானரப் படையில் இருந்த நளன் நீளன் ஆகியோரைக் கொண்டு இந்த பாலத்தை
கட்டியதாக கூறப்படுகிறது.

வங்காள விரிகுடாவை ஒட்டிய பகுதிகளில் இருந்து அரபிக்கடல் பகுதியில் உள்ள இடங்களுக்கு கப்பல்களில் வர்த்தகம் நடைபெற, கடல் பகதியை ஆழப்படுத்தி, சேது சமுத்திர திட்டம் கொண்டு வர 2005 ஆம் ஆண்டு மத்திய அரசு முயன்றது. ஆனால், மத்திய அரசின் சேது சமுத்திர திட்டம் பெரும் விவாதப் பொருளானது. சேது சமுத்திர திட்டப் பணிகளால் ராமேஸ்வரத்துக்கும் மன்னாருக்கும் இடையே அமைந்துள்ள ராமர் பாலம் பாதிக்கப்படும் என எதிர்ப்பு எழுந்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் தொடரப்பட்டது.

அந்த வழக்கின் தொடர்ச்சியாக, தற்போதை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளது.  அதில், சேது சமுத்திர திட்டத்துக்காக ராமர்
பாலத்தை அகற்ற  என்றும், பாலத்தை சேதப்படுத்தாமல், வேறு பாதையில் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரமாணப் பத்திரத்தில்
கூறப்பட்டுள்ளது.