அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை நிகழ்வுக்கு தலித் என்பதால் தான் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை அழைக்கவில்லை என்று தமிழகத்தில் திமுக மற்றும் திக ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் அதற்கான காரணம் தெரியவந்துள்ளது.

பாஜக தனது தேர்தல் அறிக்கையை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என்பது கடந்த 30 ஆண்டுகளாக பாஜக ஒவ்வொரு முறையும் தனது தேர்தல் அறிக்கையில் கொடுக்கும் வாக்குறுதியாகும். அந்த வாக்குறுதியின் அடிப்படையில் பாஜக தலைமையிலான மத்திய அரசு அயோத்தியில் ராமர் கோவிலை கட்ட உள்ளது. ஆனால் அங்கு கோவிலை கட்ட இருப்பது மத்திய அரசு அல்ல. சுய அதிகாரம் கொண்ட அறக்கட்டளை ஒன்று தான் ராமர் கோவில் பணிகளை மேற்கொள்ள உள்ளது.

அதாவது அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இருப்பதுமோடி தலைமையிலான மத்திய அரசு அல்ல. ராமர் கோவில் கட்டுவதற்கு என்று உருவாக்கப்பட்டுள்ள அறக்கட்டளை தான். இந்த அறக்கட்டளை சுயஅதிகாரம் கொண்டது. ராமர் கோவிலின் அமைப்பு தொடங்கி அனைத்தையும் தன்னிச்சையாக தீர்மானித்து செயல்படக்கூடியது. உதாரணமாக ராமர் கோவில் கட்டுவதற்கு சுமார் 300 கோடி ரூபாய் செலவு என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த 300 கோடி ரூபாயில் கணிசமான தொகையை மத்திய அரசு நன்கொடையாகவே அளிக்க உள்ளது.

இதே போல் நாடு முழுவதும் ஏன் உலகம் முழுவதும் உள்ள ராம பக்தர்களிடம் நன்கொடை பெற்று கோவில் கட்டும் பணியில் அறக்கட்டளை ஈடுபட்டுள்ளது. உச்சநீதிமன்றம் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதித்த போதே, அறக்கட்டளை மூலமாகவே கோவிலை கட்ட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் அறக்கட்டளை தான் தற்போது ராமர் கோவில் கட்டும் பணிகளை துவங்கியது. எப்படி கோவில் தொடர்பான அனைத்து பணிகளையும் மேற்கொள்ள அறக்கட்டளைக்கு முழு அதிகாரம் உள்ளதோ, அதே போலத்தான் பூமி பூஜை நிகழ்ச்சியிலும் அறக்கட்டளைக்கு மட்டுமே முழு அதிகாரம்.

பூமி பூஜை நிகழ்ச்சிக்கு யாரை அழைப்பது, நிகழ்ச்சியை எப்படி நடத்துவது என்பன உள்ளிட்ட அனைத்து பணிகளையும் அறக்கட்டளை தான் ஒருங்கிணைத்துள்ளது. அந்த வகையில் ராமல் கோவிலுக்கு நாட்டின் தலைவரான மோடி அடிக்கல் நாட்ட வேண்டும் என்று அறக்கட்டளை ஒரு மனதாக முடிவெடுத்து மோடியை அழைத்துள்ளது. இதனை ஏற்று மோடி அயோத்தி சென்று ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். நிகழ்ச்சியில் பேசிய போது கூட என்னை அறக்கட்டளை அடிக்கல் நாட்ட அழைத்தது தான் வாழ்வில் பெற்ற பெரும் பாக்கியம் என்று மோடி கூறினார்.

அந்த வகையில் நிகழ்ச்சிக்கு மோடி தலைமை ஏற்க வேண்டும் என்று முடிவெடுத்தது பாஜக அரசு அல்ல, ராமர் கோவில் அறக்கட்டளை தான். சரி மோடிக்கு அழைப்பு விடுத்த அறக்கட்டளை ஏன் குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று சந்தேகம் எழலாம். இந்தியாவை பொறுத்தவரை அரசியல் அமைப்பின் தலைவர் குடியரசுத் தலைவர், அரசின் தலைவர் பிரதமர். இந்த இருவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலும் மரபுகள் பின்பற்றப்படும். உதாரணமாக சுதந்திர தினம் என்றால் அன்றைய தினம் பிரதமர் தேசியக் கொடி ஏற்றி செங்கோட்டையில் உரையாற்றுவது மரபு.

இதே போல் குடியரசு தினம் என்றால் குடியரசுத் தலைவராக இருப்பவர் ராஜபாதையில் கொடியேற்றி ராணுவ வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்வது மரபு. இங்கு குடியரசு தின விழாவில் பிரதமர் கலந்து கொள்ள முடியும். ஏனென்றால் அரசியல் அமைப்புச் சட்டப்படி குடியரசுத் தலைவர் என்பது உயர்ந்த பதவி, அவருக்கு அடுத்த படிநிலையில் இருப்பவர் தான் பிரதமர். எனவே குடியரசுத் தலைவர் தலைமை ஏற்கும் நிகழ்ச்சிகளில் பிரதமர் பங்கேற்பது மரபை மீறுவது ஆகாது.

அதே சமயம் சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் பிரதமர் தேசியக் கொடி ஏற்றுவார். இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பங்கேற்காமல் இருப்பது மரபு. அதாவது அங்கு கொடியேற்றும் உரிமை பிரதமருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மரபுப்படி இது காலம் காலமாக பின்பற்றப்படுகிறது. அந்த நிகழ்ச்சிக்கு குடியரசுத் தலைவர் சென்றால் பிரதமர் முக்கிய பிரமுகராகவும் குடியரசுத் தலைவர் பார்வையாளராகவும் கருதப்படுவார். இது மரபை மீறுவதாகும். அதாவது இந்திய அரசியல் அமைப்பின் அடிப்படையிலான படிநிலைத்துவம் புரோட்டகால் மீறப்பட்டதாகிவிடும்.

எனவே தான் பிரதமர் தலைமை ஏற்கும் நிகழ்ச்சிகளுக்கு குடியரசுத் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பி வைக்கப்படுவதில்லை. அந்த வகையில் அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையில் அடிக்கல் நாட்ட பிரதமர் அழைக்கப்பட்டுள்ளார். அந்த அடிப்படையில் மரபுபடி குடியரசுத் தலைவருக்கு அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படவில்லை. பிரதமர் அடிக்கல் நாட்ட வேண்டும் என்று அறக்கட்டளை முடிவு எடுத்திருந்தாலும் அது ஒட்டு மொத்த மக்களின் விருப்பமாக பார்க்கப்படுகிறது. எனவே தான் புரோட்டகால்படி பிரதமருக்கு மட்டும் நிகழ்விற்கு அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மற்றபடி இதில் தலித் என்பதால் குடியரசுத் தலைவருக்கு அழைப்பு இல்லை என்று கூறுவது எல்லாம் திமுக ஆதரவாளர்களின் அரசியல் முதிர்ச்சியின்மை. உதாரணமாக திமுக ஆட்சியில் இருந்த போது கோவையில் செம்மொழி மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டிற்கு தமிழகம், தமிழ் மொழிக்கு தொடர்பு இல்லாத பல்வேறு வட மாநிலத்தலைவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பி நிகழ்ச்சியில் கவுரவிக்கப்பட்டனர். ஆனால் தமிழகத்தில் அடையாளமாக விளங்கிய, சுத்த தமிழர், அதிலும் சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த அப்துல் கலாம் அவர்களுக்கு கோவை செம்மொழி மாநாட்டிற்கு அழைப்பு கூட அனுப்பி வைக்கப்படவில்லை, நிகழ்ச்சிகளிலும் அவரை பங்கேற்க அழைக்கவில்லை. கலைஞர் ஏன் இப்படி செய்தார்? அப்துல் கலாம் சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் அவரை செம்மொழி மாநாட்டில் கவுரவிக்கவில்லை என்று கூறினால் உடன்பிறப்புகள் ஏற்பார்களா?