பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதால் ஏற்பட்ட அதிருப்தியை களைய முஸ்லீம் ஒருவரை ராஜ்யசபா எம்பியாக்க அதிமுக முடிவெடுத்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வியை தழுவியது. இதற்கு காரணம் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது தான் என்று அமைச்சர் சி.வி. சண்முகம் வெளிப்படையாக கூறினார். மேலும் சில மாவட்டச் செயலாளர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் இதே கருத்தை தான் கட்சி நிர்வாகிகள் கூட்டத்திலும் கூறினர். மேலும் பாஜகவுடன் கூட்டணியை தொடர்வதால் சிறுபான்மையினர் வாக்குகளை நாம் இழந்துவிட்டதாகவும் அதிமுக நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

 

இதனை அடுத்து இஸ்லாமியர்களை சமாதானப்படுத்த அதிமுக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஹஜ் யாத்திரைக்கு கூடுதல் மானியம், கூடுதல் பயணிகளுக்கு அனுமதி என்று பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. அதன் தொடர்ச்சியாக அதிமுக சார்பில் முஸ்லீம் ஒருவரை ராஜ்யசபா எம்பியாக்கவும் அவர் முடிவெடுத்துள்ளதாக கூறுகிறார்கள். 

அதிமுகவிற்கு சட்டப்பேரவையில் உள்ள பலத்தின் அடிப்படையில் 3 பேரை ராஜ்யசபாவுக்கு அனுப்ப முடியும். ஆனால் பாமகவிற்கு ஒரு எம்பி பதவியை அதிமுக கொடுக்க வேண்டியுள்ளது. எனவே எஞ்சிய 2 எம்பி சீட்டுகளை ஒன்றை முஸ்லீம் ஒருவருக்கு கொடுக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அந்த ஒற்றை சீட்டுக்கு ராமநாதபுரம் அன்வர் ராஜ் மற்றும் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் இடையே போட்டி நிலவுகிறது.

 

ஆனால் தமிழ் மகன் உசேன் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என இருவரிடமுமே சுமுகமான உறவை வைத்துள்ளார். எனவே அவருக்கு தான் ராஜ்யசபா செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள். இதே போல் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரான கே.பி.முனுசாமியும் ராஜ்யசபா எம்பி ஆகும் கனவில் உள்ளார். ஓபிஎஸ் எப்படியும் தன்னை ராஜ்யசபா எம்பி ஆக்கிவிடுவார் என்று அவர் நம்பிக் கொண்டிருக்கிறார்.

ஆனால் கே.பி. முனுசாமியை டெல்லிக்கு அனுப்ப எடப்பாடி விரும்பமாட்டார் என்கிறார்கள். தமிழக அரசியல் சசிகலாவுக்கு எதிராக திரும்ப காரணமானவர்களில் மிக முக்கியமானவர் கே.பி. முனுசாமி. ஓபிஎஸ்சுக்கு பக்க பலமாக இருந்து அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தி பிறகு ஒன்றாக சேர்த்ததில் முனுசாமிக்கு முக்கிய பங்கு உண்டு. அந்த வகையில் இந்த அளவிற்கு அரசியல் அனுபவம் கொண்ட அவரை டெல்லி அனுப்பினால் தனது டெல்லி தொடர்புகளுக்கு ஆபத்து என்பதால் முனுசாமியை ராஜ்யசபா எம்பி ஆக்காமல் இருப்பதற்கு காய் நகர்த்தப்படுவதாக கூறுகிறார்கள்.