மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ உள்ளிட்டோர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தனர். 

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட 6 பேரின் பதவிக்காலம் வருகிற ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்படி அதிமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட ஏ.கே.செல்வராஜ், எஸ்.முத்துக்கருப்பன், விஜிலா சத்தியானந்த், சசிகலா புஷ்பா ஆகியோரும், திமுக உறுப்பினர் திருச்சி சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ஆகிய 6 பேரின் பதவி காலியாகிறது. இவர்களுக்கு பதில் புதிதாக 6 எம்.பி.க்களை தமிழக எம்எல்ஏக்கள் தேர்ந்து எடுக்க வேண்டும். இதற்கான தேர்தல் மார்ச் மாதம் 26-ம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில், மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், இளங்கோ ஆகியோர் வேட்பாளராக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டனர். இதனையடுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் 3 வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இந்த வேட்பு மனுத்தாக்கள் மனுவில் ஒரு வேட்பாளருக்கு 10 எம்எல்ஏக்கள் முன்மொழிய வேண்டும். 

அதேபோல, வேட்பாளர்களின் சொத்து விவரம், அவர் மீது ஏதேனும் வழக்கு இருக்கிறதா? போன்ற விவரங்கள் இடம்பெற்று இருக்கும். இதில், திமுக முக்கிய நிர்வாகிகளான ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து, 3 பேர் தேர்வு செய்யப்படும் பட்சத்தில் மாநிலங்களவையில் திமுகவின் பலம் 7-ஆக உயர்கின்றது.