மக்களவை தேர்தலில் பாஜவுடன் கூட்டணி வைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து கடுமையாக விமர்சனம் செய்து வந்த தம்பிதுரையை அதிமுக ஓரம்கட்டப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வரும் 18-ம் தேதி நடைபெறுகிறது. இதில் அதிமுகவுக்கு உள்ள 3 இடத்தில் ஒரு இடம் பாமகவுக்கு தரப்பட்டது. மீதியுள்ள 2 இடத்தை கேட்டு தம்பிதுரை, கே.பி.முனுசாமி, தமிழ்மகன் உசேன் உள்ளிட்டோர் தலைமையை நச்சரித்து வந்தனர். எம்.ஜி.ஆர். மன்ற 40 மாவட்ட செயலாளர்கள் தமிழ்மகன் உசேனுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை விடுத்தனர். 

ஆனால், யாருமே எதிர்பாராத முன்னாள் அமைச்சர் முகமதுஜான், மேட்டூர் நகர செயலாளர் சந்திரசேகரன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இது அதிமுகவில் சீனியர்களை அதிருப்தி அடைய செய்தது. குறிப்பாக, தம்பிதுரைக்கு எப்படியும் எம்.பி. சீட் வழங்கி விடுவார்கள் என்று பேசப்பட்டது. ஆனால், இறுதியில் அவருக்கு எம்பி சீட் மறுக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் அதிமுக தலைமை மீது கடும் கோபத்தில் இருந்து வருகிறார்.  

இது தொடர்பாக அதிமுக மேலிடத்தில் விசாரித்த போது தம்பிதுரைக்கு மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு கல்தா கொடுக்கப்பட்டதன் பின்னணியில் பாஜக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

மக்களவை தேர்தலில் பாஜவுடன் கூட்டணி வைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தவர் தம்பிதுரை. பாஜவை தோளில் சுமக்க நாங்கள் என்ன பாவம் செய்தோம் என்று கேட்டார். இதனால் தம்பிதுரை மீது டெல்லி பாஜக தலைவர்கள் கடும் கோபத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில், நேரம் பார்த்து வழிவாங்கவேண்டும் என நினைத்த பாஜக கூட்டணி விவகாரத்தில் பாஜவையும், மத்திய அரசையும் விமர்சித்த தம்பிதுரைக்கு எம்பி சீட் கொடுக்க கூடாது என பாஜ மேலிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவு போட்டு விட்டது. இதனால் எம்பி சீட் கொடுக்க நினைத்திருந்த முதல்வர் எடப்பாடி  பழனிசாமி இறுதியில் பின் வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது.