டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் இந்திய கடல்  எல்லைகளை பாதுகாக்க உருவாக்கப்பட்டது. ஆனால் அந்த கப்பலை யாராவது சுற்றுலாவுக்காக பயன்படுத்துவார்களா? என கேள்வி எழுப்பிய மோடி, ஆமாம் அப்படி ஒரு  சம்பவம் நடந்தது உண்மைதான என குறிப்பிட்டார்.

அது வேறு யாருமல்ல, நமது முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தந்தையும் தான் அது என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் விக்ராந்த் கப்பல் எப்படி ராஜிவ் காந்தியால் முறைகேடாக பயன்படுத்தப்பட்டது  என்பது குறித்து பேசினார்.

கடந்த 1987 ஆம் ஆண்டு ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்க்ப்பலை ராஜிவ் காந்தி குடும்பத்தினர் 10 நாட்கள் சுற்றுலாவுக்காக எடுத்துச் சென்றனர். அதில் ராஜிவ் காந்தி, அவரது மனைவி சோனியா, பிரியங்கா, ராகுல் மற்றும் சோனியா காந்தியின் மாமனார், மாமியார் உள்ளிட்டோரும் அழைத்துச் செல்லப்பட்டனர்.

ராகுலில் மாமனார், மாமியார் இத்தாலியைச் சேர்ந்தவர்கள். வெளிநாட்டவர். ஆனால் அவர்களை இந்தியாவிள் மதிப்பு மிக்க பாதுகாப்பு கப்பலில் அழைத்துச் செல்லலாமா ? என கேள்வி எழுப்பிய மோடி, இது இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் சவால் இல்லையா எனவும் குற்றம் சாட்டினார்.

ராஜிவ் குடும்பம் லட்சத் தீவில் உள்ள பங்காராம் தீவுக்கும் அதைத் தொடர்ந்து கொச்சியில் இருந்து 465 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எமரால்டு புளூ  தீவிற்கும் சென்றனர். அப்போது கப்பற்படையைச் சேர்ந்த ஊழியர்கள் இவர்களுக்கு பணியாளர்களாக நியமிக்கப்பட்டனர். மேலும் சிறப்பு ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டன.

இந்த சுற்றுலாவில் ராகுல், பிரியங்கா, சோனியாவின் சகோதரி, மைத்துனர், அவரது மகள், தாய், அவரது  சகோதரர் உள்ளிட்டோர் சென்றனர். முன்னதாக அவாகள் அனைவரும் கப்பலில் சென்றுவிட்ட நிலையில், ராஜிவ் தனது நண்பர்கள் 4 பேருடன் ராணுவ ஹெலிகாப்டரில் தீவை அடைந்தனர்.

ராஜிவ் குடும்பத்தினருடன் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் குடும்பத்தினரும் இணைந்து கொண்டனர். அது மட்டுமல்லாமல் முன்னாள் மத்திய அமைச்சர் அருண்சிங்கின் சகோதரர் குடும்பமும் இந்த சுற்றுலாவில் பங்கேற்றது.

அவர்களின் 10 நாட்கள் சுற்றுலாவுக்கு எவ்வளவு செலவாகியிருக்கும என்பதை கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது என மோடி குறிப்பிட்டார்.
இவர்களின் உணவுக்காக கொச்சியில் இருந்து மது வகைகள், சிக்கன், விலை உயர்ந்த பழங்கள், உணவு வகைகள் போன்றவை ஒவ்வொரு நாளும் எடுத்துச் செல்லப்பட்டன. 

இந்திய  நாட்டின் பாதுகாப்புக்காக வாங்கப்பட்ட ஒரு போர் கப்பலை ராஜிவ் குடும்பத்தினர் எவ்வளவு மோசமாக பயன்படுத்தினர் என வெளியாகியிருக்கும் தகவல் தன்னை அதிர்ச்சி அடையச்  செய்வதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, இந்தியாவின் பாதுகாப்பு குறித்து கொஞ்சமும் கவலைப்படாத இந்த குடும்பத்தையா நீங்கள் தேர்நதெடுக்கப்போகிறீர்கள் ? என கேள்வி எழுப்பினார்.