முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நளினி திடீரென தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாத்தான்குளம் சம்பவம் இன்னும் முடிவுக்கு வராதநிலையில் காவல்துறைக்கு கரும்புள்ளி ஏற்பட்டிருக்கும் இந்த நேரத்தில் நளினி சிறைக்குள் தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் அங்குள்ள சிறைத்துறை அதிகாரிகளை கதிகலங்க வைத்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன் உட்பட 7 பேர் ஆயுள் தண்டனை பெற்று கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இந்த நிலையில்  வேலூர் பெண்கள் சிறையில் இருக்கும் நளினி திடீரென துணியால் கழுத்தை இறுக்கி தற்கொலைக்கு முயன்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். திடீர் தற்கொலைக்கான காரணத்தை காவல்துறை அதிகாரிகள் விசாரணை செய்ததில்...

"நளினிக்கும் சக கைதி பெண் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் அந்த பெண் கைதி சிறை அதிகாரியிடம் புகார் அளித்ததாகவும், சிறை அதிகாரி நளினியை விசாரித்ததால் அவருக்கு மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர் சிறை அதிகாரிகள். மருத்துவமனையில் நளினியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கழுத்தில் எந்த காயமும் இல்லை எனவும், உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவச் சான்றிதழ் அளித்துள்ளனர். இந்த நிலையில் என் மகளின் உயிருக்கு  பாதுகாப்பு இல்லை என்று நளினியின் தாயார் அவரை புழல் சிறைக்கு மாற்ற சொல்லி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். நளினி சென்னை புழல் சிறைக்கு மாற்றப்படுவாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.