முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால், சீமான் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான  வேட்பு மனு தாக்கல் முடிந்து, அடுத்தகட்டமாக கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் சூறாவாளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். அப்போது, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை நாங்கதான் கொன்றோம். ஒருநாள் வரலாறு திரும்ப எழுதப்படும். அப்போது இந்திய ராணுவத்தை அமைதி படை என்ற பெயரில் அனுப்பி தமிழின மக்களை அழித்தொழித்த, தமிழின துரோகி ராஜீவை தமிழ் மண்ணிலேயே கொன்று புதைத்தோம் என வரலாறு எழுதப்படும் என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இவரின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். சீமானைத் தேசதுரோக வழக்கில் கைது செய்ய வேண்டும் எனவும், நாம் தமிழர் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை வெளியிட்டிருந்தார். 

இந்நிலையில், ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சி சீமான் மீது விக்கிரவாண்டி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வன்முறையை தூண்டும் வகையிலும், தேசிய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் பேசியதாக சீமான் மீது 2 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், எந்தநேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.