சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘அண்ணாத்த’.சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள்.

கொரோனாவுக்கு முன்பே படத்தின் 40 சதவிகிதப் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், தற்போது டிசம்பர் இரண்டாம் வாரத்தில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. ரஜினி அரசியலுக்கு வர இருப்பதாக அறிவித்திருந்த நிலையில் வேக வேகமாக ஷூட்டிங்கை நடத்தி வந்தனர். ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நினைத்ததைவிட வேகமாகப் படப்பிடிப்பு நடந்துவந்தது. 12 முதல் 14 மணி நேரம் படப்பிடிப்பிலும் சூப்பர் ஸ்டார் கலந்து கொண்டார்.

இப்படியான சூழலில் படக்குழுவில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானதாலும், ரஜினியின் உடல்நிலை சரியில்லாமல் போனதாலும் படப்பிடிப்பு அப்படியே நிறுத்தப்பட்டது. ரஜினிக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நெகட்டிவ் வந்தது. மருத்துவ ஆலோசனையின்படி மீண்டும் சென்னைக்குத் திரும்பியுள்ளார் ரஜினி. இந்த நேரத்தில், உடல்நிலையை மனத்தில் கொண்டு அரசியல் கட்சியைத் தொடங்கவில்லை என்றும் அவர்  அறிவித்துவிட்டார்.

இந்நிலையில் ரஜினியையும் மனதில் கொண்டு, அடுத்த வருட பிப்ரவரியில் சென்னையில் படப்பிடிப்பைத் தொடங்கலாம் என்று தயாரிப்பு நிறுவனத்தினர்  யோசித்து வருகிறார்கள். படப்பிடிப்புக்கு ஹைதராபாத் வரை செல்ல வேண்டாம். அதை சென்னையிலேயே நடத்த செட் பணிகளைத் தொடங்க இருக்கிறது படக்குழு. அதோடு, 75 சதவிகிதப் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகத் தெரிகிறது. மீதி படப்பிடிப்பை பிப்ரவரி மாதத்திலேயே முடித்துவிடவும்  திட்டமிடப்பட்டிருக்கிறது. அண்ணாத்த  நிச்சயம் ரஜினிக்கு ஒரு ப்ளாக் பஸ்டர் ஹிட் படமாக இருக்கும் என்று கோலிவுட் வட்டாரத்தினர் நம்புகின்றனர்.