ரஜினியின் அரசியல் பரிதாபங்கள்!: மாசம் போயி சித்திரை வந்துச்சுன்னா சிங்கப்பூர் அதிபர் மாதிரி  ஜெகஜோதியா வருவாம்ல!

தர்பார் படம் ரிலீஸான பின் தமிழகத்தில் ரஜினியின் அரசியல் தர்பார் துவங்கும்! என்று அவரது ரசிக கோடிகளும், அவரது செல்வாக்கை வைத்து சம்பாதிக்கும் சில நபர்களும் சொல்லிக் கொண்டிருந்தனர். இதோ தர்பார் படமும் வந்தாச்சு! தள்ளாட்டம் கலந்த தில்லாட்டமாக அப்படம் கலவையான ரியாக்‌ஷன்களுடன் கடந்து போய்க் கொண்டிருக்கிறது. 

இந்த சூழலில் சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது அடுத்த படத்துக்கான ஷூட்டிங்கில் செம்ம பிஸியாக இருக்கிறார் ரஜினிகாந்த். இப்போதும் ’இப்படம் முடிந்த பின் ரஜினி கட்சியை துவக்குவார், 2021 தேர்தலி அவர் கட்சி போட்டியிடும்!’ என்கிறார்கள். 

இந்த நிலையில், ரஜினி மெய்யாலுமே அரசியலுக்கு வரத்தான் போகிறாரா இல்லையா! எனும் அலசல் கட்டுரை ஒன்றை பிரபல வாரம் இருமுறை அரசியல் புலனாய்வு புத்தகம் ஒன்று எழுதியிருக்கிறது. அதில் பேட்டி கொடுத்திருக்கிறார் ரஜினி விஷயங்களில் வான்டட் ஆக ஆஜர் போட்டு, அண்ணனுக்கு ஜே! போடும் இயக்குநர் பிரவீன்காந்தி. சூப்பரின் தாறுமாறான வெறித்தன ஃபேன் ஆன ப்ரவீன் சொல்லியிருப்பது இதுதான்....

“சித்தர்கள், ஆன்மீகவாதிகள் மாதிரிதான் சூப்பர் ஸ்டார் ரஜினியும். சித்தர்கள் பெரும்பாலும் களத்துக்கு வருவதில்லை. ஆனால், மக்கள் மிக நன்றாக இருக்க வேண்டும் என்று தொடர்ந்து  பிரார்த்திப்பார்கள், கடினமாக வேலை செய்வார்கள் அந்த இலக்கை நோக்கி. 

ரஜினியும் அதைத்தான் செய்கிறார். தமிழக மக்கள் நலமோடு  வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதற்காக ஆட்சியைப் பிடித்துதான் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று ரஜினி நினைக்கவில்லை. அதையும் தாண்டி சிந்திக்கிறார். அவரது உடல் நலன் பாதிப்பு அடைந்தபோது, ஒட்டுமொத்த தமிழக மக்களின் கூட்டுப் பிரார்த்தனையால்தான் மீண்டும் பழைய நிலைக்கு வந்தார். அதை இப்போது நினைத்துப் பார்க்கிறார். அதனால் மக்களுக்கு நன்மை செய்தே தீரவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அதற்கு எல்லோரும் நினைப்பது போல் தேர்தல் வெற்றி, பதவிக்கு வந்துதான் செய்யணும் என்றில்லை. 

சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் லீ குவான்யு போல வரவேண்டும் என்பதுதான் தலைவரின் அல்டிமேட் ஆசை. அவர் அரசியலுக்கு வந்தால், திராவிட கட்சிகள் காணாமல் போய்விடும் வாய்ப்பு உள்ளது. எனவேதான் அவரைப்பற்றி அவதூறு செய்திகளைப் பரப்பிவிடுகிறார்கள். ஆனால் ஆன்மிக சக்தியால் ரஜினி 2021ல் கண்டிப்பாக தமிழக முதல்வர் பதவியில் வந்து உட்காருவார்.” என்று தன் படத்தை போலவே ஏக குழப்பங்களுடன் பேசியிருக்கிறார். 
இதே கட்டுரையில் இன்னும் சிலரும்  ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி தங்களின் கருத்துக்களை சொல்லியுள்ளனர். ரஜினியின் நண்பர் ஒருவர்....” ரஜினியின் படங்களில்தான் பஞ்ச் டயலாக் இருக்கும். ஆனால், தன் அரசியலுக்கும் அவர் பஞ்ச் டயலாக் வெச்சிருக்கிறார். அது என்ன தெரியுமா?....’ஓட்டு போட்டால் உனக்கு நல்லது! இல்லேன்னா அது எனக்கு நல்லது!’ என்பதுதான். அதாவது அவரது தொண்டர்களும், மக்களும் அவர் கட்சிக்கு ஓட்டுக்களை அள்ளிப்போட்டு, அவரை ஜெயிக்க வைத்தால் அவர்  முதல்வர் பதவியில் வந்தமர்ந்து நல்லாட்சி தருவார். 

ஒருவேளை அவர்கள் ஓட்டுப்போடாமல், அவர் தோற்றுப்போனால் மறுபடியும் வழக்கம்போல் தனது சினிமா மற்றும் ஆன்மிக பணிகளை பார்க்க ஜாலியாக கிளம்பிவிடுவார்! அதுதானே அவருக்கு பிடித்தமான விஷயங்கள்.” என்றும் சொல்லி இருக்கிறார்கள். 
வெளங்கிடும்ல!...........ஹவ் இஸ் இட்?

-    விஷ்ணுப்ரியா