ஜனவரி மாதம் கட்சி துவங்கப் போவதாக, நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார். வரும், 31ல், கட்சியின் பெயர், கொடி போன்ற விபரங்களை வெளியிடவும், அவர் தயாராகி வருகிறார். கட்சி துவக்கும் அறிவிப்பை, ரஜினி வெளியிட்டதும் அ.தி.மு.க.,வும், அதன் கூட்டணி கட்சிகளும் உற்சாகம் அடைந்துள்ளன. அதேவேளை, தி.மு.க.,வும், அதன் கூட்டணி கட்சிகளும் கலக்கம் அடைந்துள்ளன. வரும் சட்டசபை தேர்தலில், ரஜினி தலைமையில், மூன்றாவது அணி அமைத்து போட்டியிட, வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது.

அ.தி.மு.க., - தி.மு.க., - ரஜினி அணி என மும்முனை போட்டி ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது. அப்போது அதிமுக ஆட்சிக்கு எதிரான ஓட்டுக்களை, மொத்தமாக அறுவடை செய்யலாம் என்கிற தி.மு.க.,வின் திட்டம் பலிக்காமல் போகும். ஆளும் கட்சி எதிர்ப்பு ஓட்டுக்களில் ஒரு பங்கை, ரஜினி கைப்பற்றக்கூடும். 

இதனால், தி.மு.க.,வின் வெற்றி வாய்ப்பு பாதிக்கும் நிலை உருவாகி இருக்கிறது. அதே நேரத்தில், தி.மு.க.,வில் ஓரம் கட்டப்பட்டவர்களும், ஒதுங்கியிருப்பவர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர். ரஜினி கட்சியில் சேர, தூது விட்டு வருகின்றனர். இதுவும், தி.மு.க.,வுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதுவரை, தி.மு.க.,வுக்கு ஓட்டு அளித்து வந்துள்ள ஹிந்துக்கள், ரஜினி கட்சிக்கு ஓட்டு போடும் வாய்ப்பும் உருவாகி உள்ளது.

தி.மு.க., வில் உள்ள, ரஜினி ரசிகர்களின் ஓட்டுக்களையும், அக்கட்சி இழக்க வேண்டிய நெருக்கடி உள்ளது. இதுபோன்ற காரணங்களால், ரஜினி வரவால், ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டு விடுமோ என்ற கலக்கம், தி.மு.க.,வினரிடம் காணப்படுகிறது.