அடுத்த சட்டசபை தேர்தலுக்குள் ரஜினிகாந்த் கட்சி தொடங்கி விடுவார் என காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார். 

சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என கராத்தே தியாகராஜன் கருத்து தெரிவித்திருந்த நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை, கராத்தே தியாகராஜன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கராத்தே தியாகராஜன்,

’’நான் பேசிய நாளில் மாவட்ட செயலாளர்கள் பலரும் கூட என் கருத்தையே கூறினர். ஆனால் அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. என் மீது மட்டும் ஏன் இத்தனை அழுத்தம் கொடுக்கின்றனர். என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு மு.க.ஸ்டாலினின் அழுத்தம் தான் காரணம்’’ என அவர் தெரிவித்து இருந்தார்.   

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், ‘’திமுகவின் நிர்பந்தத்தால் தான் என்னை நீக்கியதாக தூது அனுப்பினார் கே.எஸ்.அழகிரி. அடுத்த சட்டசபை தேர்தலில் ரஜினிக்கும் ஸ்டாலினுக்கும் இடையே தான் பேட்டி. அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்குள் ரஜினி உறுதியாக கட்சி தொடங்குவார். 1996-ல் காங்கிரஸை உடைத்து தாமக உருவாக காரணமே ஸ்டாலின்தான். ப.சிதம்பத்துக்கு துரோகம் இழைத்து விட்டார் கே.எஸ்.அழகிரி. கார்த்திக் சிதம்பத்திற்கு பதிலாக நாசே.ராமச்சந்திரன் பெயரை கே.எஸ்.அழகிரி பரிந்துரைத்தார்’’ என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.  

இதன் மூலம் காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள கராத்தே தியாகராஜன் மீண்டும் அக்கட்சிக்கு திரும்பாமல் ரஜினி ஆரம்பிக்கும் கட்சிக்கு செல்ல இருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே ரஜினியின் நெருங்கிய நண்பர்கள் பட்டியலில் இருப்பவர் கராத்தே தியாகராஜன்.