ரஜினி, சீட்டாடவும், அரட்டை அடிக்கவும் பழக்கப்பட்ட மனுஷன்! அவருக்கு அரசியல் சரிப்பட்டு வராதுய்யா: போட்டுப் பொளந்த விமர்சகர்

ஆக! இதோ பொங்கல் பண்டிகை கோலாகலமாக துவங்கிவிட்ட இந்த நேரத்திலும் கூட தமிழக அரசியல் திசையிலோ ‘ரஜினிகாந்த் கட்சி துவக்குவாரா மாடாரா?’ என்று ஆவி பறக்க யோசித்தும், ஆலோசித்தும் கொண்டிருக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்களும், விமர்சகர்களும்.
 
பிரபல வாரம் இரு முறை அரசியல் புலனாய்வு புத்தகம் ஒன்று ரஜினியின் அரசியல் என்ட்ரி  குறித்து ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறது. அதில் ரஜினிக்கு ஆதரவாக பேட்டி அளித்திருக்கும் சினிமா இயக்குநர் பிரவீன்காந்த் ‘தலைவர் நிச்சயம் கட்சி துவக்குவார்! 2021 சட்டமன்ற தேர்தலின் மூலம் முதல்வராகவும் வந்தமர்வார்! அவருக்கு அரசியலெல்லாம் பிடிக்கிறதோ இல்லையோ! ஆனால் தமிழக மக்கள் மிக நலமாக இருக்க வேண்டுமென்று நினைக்கிறார். சிங்கப்பூர் முன்னாள் அதிபர் லீ குவான்யு போல வரவேண்டும் என்பதே அவரது அல்டிமேட் ஆசை!’ என்று ஐஸ் மலையையே ரஜினியின் தலை மேல் வைத்திருந்தார். 

இந்த நிலையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் சாத்தியப்படுமா? சாதிப்பாரா? என்பது குறித்து அதே கட்டுரையில் பேசியிருக்கிறார்  பத்திரிக்கையாளரும், விமர்சகருமான சாவித்திரி கண்ணன். அவரோ ரஜினியை இன்ச் பை இன்ச் பிரித்து, ச்சும்மா கிழித்து மேய்ந்திருக்கிறார் இப்படி....

“அரசியல் ஆர்வம், ஈடுபாடு என்பதெல்லாம் நெஞ்சில் எந்நேரமும் அணையாது எரிந்து கொண்டே இருக்க வேண்டிய நெருப்பு. ச்சும்மா தேவைக்கு ஏற்றி விட்டு, பிறகு அணைத்துவிடக்கூடிய சிறு விளக்கு அல்ல. அது ஒரு காட்டுத் தீ போல் விஸ்வரூபமாய் உசுப்ப வேண்டும். 

அப்படிப்பட்டவர்களுக்கு மட்டுமே அரசியல் வாய்ப்புகள் கதவைத் திறக்கும். ஆனால் ரஜினியை பொறுத்தவரையில் அவர் அதிகாரத்தை விரும்பவில்லை. ஆனால் அதிகார ஆசைக்கு பதிலாக தன்னுடைய தனிப்பட்ட சுதந்திரத்தை, விருப்பங்களை, நிம்மதியை பெரிதும் விரும்புபவர். அரசியல் அதிகார வட்டத்தினுள் நுழைந்தால் இதையெல்லாம் இழக்க வேண்டும் என்பது, மூத்த நடிகரான அவருக்கு நன்கு தெரியும். 

தனி மனித சுதந்திரத்தின் ஒவ்வொரு துளியையும் அவர் அணு  அணுவாக ரசித்து, அனுபவித்துச் சுவைப்பவர். நினைத்த நேரத்திற்கு நண்பர்களைத் தேடிச் சென்று அரட்டை அடிக்கவும், சீட்டு விளையாடவும் விரும்புபவர். திடீரென தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு இமயமலை மாதிரியான இடங்களுக்கும் சென்றுவிடுவார். இப்படித்தான் அவரது வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. 

சினிமாவில் விதவிதமாக நடிப்பதில் மட்டுமே மகிழ்ச்சியடைகிறார்.  தன் குடும்ப சுமைகளையே அவர்  பெரிதாய் தாங்குவதில்லை. குடும்ப சுமை, பள்ளி மற்றும் திருமண மண்டப நிர்வாகம் போன்றவற்றை பிறரிடம் ஒப்படைத்துவிட்டு, ஹாயாக வாழ்ந்து வருபவர் ரஜினி. அவரைப் போய் அரசியலுக்கு வா! வா! என்பது எப்படி சரியாகும்?

யாராவது ஒரு எதிரியை அடையாளப்படுத்தி, தீவிரமாக எதிர்ப்பு ஓட்டுக்களை ஒன்று சேர்க்காதவருக்கு அரசியல் வெற்றி சாத்தியப்படாது. அப்படிப்பட்ட முனைப்பு எதுவும் ரஜினியிடம் சிறிதும் இல்லை. தனிப்பட்ட முறையில் அவர் சிறந்த மனிதர். ஆனல் அவரது ‘இன்ஸ்டன்ட்’  அரசியல் அபத்தமானது, அவருக்கும் நாட்டுக்கும் ஆபத்துமானது.” என்று வெளுத்திருக்கிறார். 

கண்ணன்ணே! அப்படி ஒங்களுக்கு ரசினிகாந்த் மேலே என்னாண்ணே வெறுப்பு? போட்டுப் பொரிச்சுட்டீகளே!
-    விஷ்ணுப்ரியா