நடிகர் ரஜினிகாந்த் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து என்றும் தமிழக மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

ஜனவரியில் கட்சி ஆரம்பிக்கப்போவதாகவும், டிசம்பர் 31ம் தேதி அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருந்தார். ஆனால், ரஜினி நடித்த அண்ணாத்தே திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ரஜினிகாந்துக்கு நெகட்டிவ் என்றபோதிலும் சீரற்ற ரத்த அழுத்தம் காரணமாக மூன்று நாட்கள் ஐதராபாத் அப்பல்லோவில் சிகிச்சை பெற்று சென்னை போயஸ் இல்லத்துக்கு திரும்பினார். இந்நிலையில் தான் கட்சி ஆரம்பிக்கவில்லை என அறிவித்து, தன்னை நம்பியவர்களிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார் ரஜினி. இதுதொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  அமைச்சர் ஜெயக்குமார்;- அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய ரஜினிகாந்த் தன்னுடைய உடல் நிலை குறித்து ஒரு அறிவிப்பை அறிவித்துள்ளார். உடல் நிலையை கருத்தில் கொண்டு அவர் முடிவெடுத்திருப்பதன் காரணமாக அதிமுக சார்பில் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை. அவர் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து என்றும் தமிழக மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும். 

மேலும், ரஜினிகாந்த் திமுகவிற்கு ஒருபோதும் ஆதரவு அளிக்க மாட்டார். எதிர்காலத்தில் ரஜினிகாந்த் ஆதரவு என்று வரும் பட்சத்தில் அந்த ஆதரவினை மக்களுக்கு நல்லது செய்யும் அதிமுகவிற்கு மட்டும்தான் அவர் அளிப்பார். சிஸ்டம் சரி இல்லை என்று கூரியதால் அவர் அதிமுக அரசை குற்றம் கூறவில்லை. வரும் தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்பதை முதல்வர் தெளிவுபடுத்தியுள்ளார். 

இதனை கூட்டணியில் அங்கம் வகித்துள்ள அனைத்து கட்சிகளும் ஏற்றுக் கொண்டுள்ளனர். தேய் பிறை போன்ற சரிந்துவரும் கட்சி திமுக ஆகையால் வரும் தேர்தலில் அதிமுக தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்தலில் வெற்றி பெற்று மக்களுக்கு சேவை புரியும்.  2021-ல் ஒரு மெகா கூட்டணி அமைத்து வெற்றிக் கொடியினை அதிமுக நாட்டும். கூட்டணி இறுதி செய்யப்பட்ட பின்பு தொகுதி பங்கீட்டு குறித்தான முடிவினை தெரிவிப்போம் என தெரிவித்துள்ளார்.