சென்னை அண்ணா நகரில் உள்ள திருநாவுக்கரசர் வீட்டில் ரஜினி, திருமாவளவன் சந்திப்பு திடீரென நடைபெற்றுள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகிய பிறகு திருநாவுக்கரசர் உடனான ரஜினியின் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யாவின் திருணமணம் வரும் பிப்ரவரி 11-ம் தேதி நடைபெறுகிறது. இந்த திருமணத்திற்காக அரசியல் தலைவர்கள், நடிகர்கள் மற்றும் பிரபலங்களுக்கு பத்திரிக்கை வழங்கி அழைப்பு விடுத்து வருகிறார். 

இந்நிலையில் சென்னை அண்ணாநகரில் உள்ள திருநாவுக்கரசரின் வீட்டிற்கு சென்று ரஜினி அழைப்பிதழ் வழங்கிவிட்டு இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில், தங்கள் கட்சி மாநாட்டில் பங்கேற்றதற்கு நன்றி தெரிவிப்பதற்காக விசிக தலைவர் திருமாளவன் அங்கு வந்துள்ளார். இதனால் 3 பேரும் ஒரே நேரத்தில் சந்திக்கும் நிலை ஏற்பட்டது. அப்போது அங்கு வந்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கும் ரஜினிகாந்த் அழைப்பிதழ் வழங்கினார். இது ஒரு எதார்த்தமான சந்திப்பு என்று கூறப்பாட்டாலும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதை தொடர்ந்து ரஜினிகாந்த், திருநாவுக்கரசர், திருமாவளவன் சந்திப்பு தொடர்பான புகைப்படம் வெளியிடப்பட்டது.

 

முன்னதாக அமெரிக்காவில் ரஜினியை திருநாவுக்கரசர் சந்தித்தார் எனக்கூறப்பட்டு வந்த நிலையில், இந்த சந்திப்பிற்கு பிறகே காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.