கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என்பதே எனது முடிவு என நடிகர் ரஜினிகாந்த் அதிரடியாக அறிவித்துள்ளார். 

சென்னை லீலா பேலஸ் ஹேட்டலில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசுகையில், 1996-ல் இருந்தே அரசியலுக்கு வருவதாக ரஜினி சொல்லிக் கொண்டு இருக்கிறார் என பலரும் கூறுகின்றனர். ஆனால், நான் முதல்முறையாக அரசியலுக்கு வருகிறேன் என கூறியது 2017-ம் ஆண்டு டிசம்பரில்தான். ஆகவே இனிமேலாவது 1996-லிருந்தே அரசியலுக்கு வருதாக ரஜினி கூறிக்கொண்டிருக்கிறார் என பலரும் சொல்லமாட்டார்கள் என நினைக்கிறேன்.

என்னை வாழ வைத்த தெய்வங்களுக்காக அரசியலுக்கு வர 2017-ல் முடிவெடுத்தேன். கட்சிப் பதவியை தொழிலாக வைத்துள்ளனர். அது கெட்டது; மக்களுக்கு ரொம்ப கெட்டது. 1996-ல் எதிர்பாராதவிதமாக எனது பெயர் அரசியலில் அடிபட்டது. அரசியல் மாற்றத்திற்கு 3 திட்டங்களை வைத்திருக்கிறேன் என்றார். மேலும், பேசிய அவர், கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என்பதே என் முடிவு என தெரிவித்தார். முதல்வர் பதவியை நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. 

சிஸ்டத்தை சரி செய்யாமல் அரசியலுக்கு வருவது மீன் குழம்பு வைத்த பாத்திரத்தை கழுவாமல் சர்க்கரை பொங்கல் வைப்பது போன்றது என கூறினார். இளைஞர்கள் மத்தியில் எழுச்சி அலை உருவாக வேண்டும். அவ்வாறு உருவானால் அசுர பலமுடைய கட்சிகள் தோற்கும். நான் வருங்கால முதல்வர் என கூறுவதை ரசிகர்கள் முதலில் நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.