சர்கார் படத்தை அடுத்து ரஜினி நடிக்கும் பேட்ட படத்தை தயாரிக்கும் கலாநிதிமாறன். தாம்பரத்தில் உள்ள சாய் ராம் கல்லூரியில் அந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்தியது. இந்த விழாவில் சுவாரஷ்யமான எதுவுமே நடக்கவில்லை, எதிர்பார்த்து போன கூட்டத்திற்கு ஏமாற்றமே மிஞ்சியது.

மேடையில் ஏறிய ரஜினி, அரசியல் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், அரசியல் பேசி பெரும் புயலைக் கிளம்புவார் என்று எதிர்பார்த்து காத்திருந்த நேரத்தில், கஜா புயல் பற்றி பேசினார்.  கஜா புயலுக்கு அரசாங்கத்தை மட்டும் நம்பாமல் பணக்கார மக்களும் உதவ வேண்டும் என்னும் கோரிக்கை வைத்தார்.

தொடர்ந்து படத்தில் உள்ள ஒட்டுமொத்த நடிகர் நடிகைகள் பற்றி பேசினார். இயக்குனரை ஆஹா ஓஹோ எனப் புகழ்ந்தார். இதனையடுத்து தனது மருமகனையும், தனது மச்சான் மகன் அனிருத்தையும் புகழ்ந்து பேசி இருவரையும் சமாதனப் படுத்தி சேர்த்து வைத்தார்.  

அடுத்ததாக 2.0 வெற்றியை மெய்சிலிர்த்து பேசியதும் முதல் பாகமான எந்திரன் டிராப் ஆனபோது கலாநிதி மாறன் காப்பாற்றியது, எந்திரன் படத்தின் லாபத்திலிருந்து ஒரு கோடி ரூபாயை கலாநிதி மாறன் கொடுத்தது, எந்திரன் எடுக்கப்பட்டதால் இன்று உருவான 2.0 வெற்றி பெற்றது, கலாநிதி மாறனுக்கான நன்றிக்கடன் என ஒவ்வொன்றாக முடித்துவிட்டுக் கடைசி கட்டத்துக்கு ரஜினியின் பேச்சு வந்தபோது பலரும் ஆரவாரத்துடன் காத்திருந்தனர்.

ஆனால், ‘என் பிறந்தநாளுக்கு நான் ஊரில் இருக்க மாட்டேன். எனவே இது ஏமாற்றமாக இருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள்’ என்று ஒரு வெடியை வீசிச் சென்றார் ரஜினி. அவ்வளவுதான் முடிந்துவிட்டது. 

இதே இடத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக சர்கார் ஆடியோ விழா நடந்தது.  அப்போது அந்த விழாவில் பேசிய விஜய் அரசியல் வசனங்களால் அனல் தெறிக்கவிட்டார். திமுக குடும்பமாக கலாநிதிமாறன் தயாரிக்கும் படத்தில் அவரை சபையில் வைத்துக்கொண்டே, அரசியல் பேசினார். விஜய் பேசிய வசனம் திமுகவை கொந்தளிக்க வைத்தது. இதனை அடுத்து நேற்று நடந்த பேட்ட ஆடியோ விழாவில், விஜய்யைப் போல ரஜினியும் அரசியல் குறித்து ஏதாவது பேசுவார் என்று, ரசிகர்களை போலவே ஊடகங்களும் எதிர்பார்த்தன. வழக்கம் போல ஏமாற்றமே மிஞ்சியது.