rajinikanth opinion about karnataka politics

கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா, எடியூரப்பாவிற்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்தது கேலிக்கூத்து என விமர்சித்துள்ளார்.

கர்நாடகாவில் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை எந்த கட்சிக்கும் இல்லாத சூழலில், தனிப்பெரும் கட்சியாக பாஜக இருந்ததால், எடியூரப்பாவிற்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் வழங்கியிருந்தார். காங்கிரஸும் மஜத-வும் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை பெற்றிருந்தும் குமாரசாமியை ஆளுநர் அழைக்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ்-மஜத சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 24 மணி நேரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டதால், நேற்று மாலை 3.30 மணிக்கு கர்நாடக சட்டசபை கூடியது. ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என தெரிந்ததால், நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலேயே முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா.

இந்நிலையில், இதுதொடர்பாக கருத்து தெரிவித்த ரஜினிகாந்த், கர்நாடகாவில் எடியூரப்பாவிற்கு ஆளுநர் முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்தது கேலிக்கூத்து என விமர்சித்தார்.

அரசியல் கட்சி தொடங்க உள்ள ரஜினிகாந்த், தனது மக்கள் மன்ற பெண் நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், கர்நாடக ஆளுநரின் செயலை கேலிக்கூத்து என கடுமையாக விமர்சித்தார். உச்சநீதிமன்றத்தால் ஜனநாயகம் வெற்றி பெற்றிருக்கிறது எனவும் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்தார்.

ரஜினிகாந்த் ஆன்மீக அரசியல் செய்யப்போவதாக கூறியதால், ரஜினியை இயக்குவது பாஜக என்ற விமர்சனங்கள் கடுமையாக எழுந்தன. இந்நிலையில், ரஜினிகாந்த் கர்நாடகாவில் பாஜகவின் செயலை கடுமையாக விமர்சித்துள்ளார்.