தமிழக அரசியல்வாதிகளில் நக்கலடித்தே காலத்தை ஓட்டுவோர் வரிசையில் முதன்மையானவர்களில் முக்கியமானவர்  ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். மாஜி தமிழக காங்கிரஸ் தலைவரான இவரது இப்போதைய ஒரே இலக்கு, திருநாவுக்கரசரை பதவியில் இருந்து இறக்குவதுதான். அதற்காக தலைகீழ் நின்று தண்ணீர் குடித்துப் பார்க்கிறார் இந்த குஷ்பு நண்பர். ஆனாலும் ’பப்பு’ வேகவே மாட்டேங்குது!

மாஜி எம்.பி. கம் மத்திய அமைச்சரான இளங்கோவனுக்கு, தேர்தல் நெருங்கிய நிலையில் எம்.பி. ஆசை துளிர்விட்டிருக்கிறது. எப்படியாவது சீட் வாங்கிவிட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார். அதற்காக தமிழகத்தில் கூட்டணி தலைவரான ஸ்டாலினை முடிந்தவரையில் கூல் செய்து பேசிக் கொண்டிருக்கிறார் இளங்கோவன். 

தனக்கு சீட் தர நிச்சயம் திருநாவுக்கரசர் முட்டை போடுவார் என்பதால், ஸ்டாலின் வழியே சீட்டை பிடிக்கலாம் என்பது இளங்கோவின் கணக்கு. இந்நிலையில்  தமிழக அரசியல் நிலவரம், கூட்டணி விவகாரம், மோடியின் தமிழக கணக்கு என எல்லாவற்றையும் நோக்கி கமெண்டுகளை அதிரடியாய் இப்போது உதிர்த்திருக்கும் இளங்கோவன், ரஜினியின் அரசியல் முயற்சி பற்றிய கேள்விக்கு தந்திருக்கும் பதிலானது சூப்பர் ஸ்டாரை அநியாயத்துக்கு கடுப்பேற்றி, கண் சிவக்க வைத்துள்ளது என்று தகவல். 

அப்படி என்ன சொன்னார் இளங்கோ? இதைத்தான் சொன்னார்...”இப்போ இல்லைங்க, துவக்கத்தில் இருந்தே நான் ஒரு விஷயத்தை தெளிவா சொல்லிட்டு வர்றேன். அது, ரஜினிகாந்த் சர்வ நிச்சயமாக அரசியலுக்கு வரமாட்டார், வரவே மாட்டார். கட்சியை தொடங்கவும் மாட்டார். தன்னோட படங்கள் ஓடவேண்டும் என்பதற்காக அப்பப்ப சில கருத்துக்களை சொல்வார் அவ்வளவுதான். என்னோட வருத்தமே இன்னும் அவரைப் போயி ரசிகர்கள் நம்பிட்டு இருக்காங்க அப்படிங்கிறதுதான். ஐய்யோ பாவம் அவரது ரசிகர்கள். வேதனையா இருக்குது.” என்று போட்டுப் பொளந்துவிட்டார் மனிதர்.

 

இது அப்படியே ரஜினியின் செவிகளுக்குப் போயிவிட்டது. ’என்னதான் பிரச்னை இந்த பெரியார் பேரனுக்கு?’ என்றுப் புலம்பிவிட்டாராம் மனிதர். இந்நிலையில் அரசியல் பார்வையாளர்கள் வேறு வேறு லெவலில் கொளுத்திப் போடுகிறார்கள் இப்படி...’ரஜினியின் வாழ்க்கையில் இளங்கோவன் விளையாடுவது ஒன்றும் புதிதில்லை. இதற்கு முன்னரே ரஜினியின் வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையை உண்டாக்கியவர் இளங்கோவன்.

அதாவது ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்குமான காதலானது உச்சம் தொட்டது, அது உலகின் கண்களில் விழுந்ததும் இதே இளங்கோவன் வீட்டு கல்யாணம் ஒன்றின் போதுதான்.” ஹெளவ் இஸ் இட்!?