இடஒதுக்கீடு, சமூக நீதி போன்றவற்றை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட திமுக இது போன்ற தனித்துவமான கொள்கைகளை முன் வைத்து காங்கிரசிடம இருந்து ஆட்சியை கைப்பற்றியது. அதிமுக உருவான பிறகு திமுகவின் கொள்கைகளை சமரசமின்றி அப்படியே ஏற்றுக் கொண்டது. இருந்தாலும் கூட தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக என இரண்டு ஆளுமைகளால் மட்டுமே கோலோச்ச முடிந்தது. இதற்கு காரணம் சினிமாவை போலவே தமிழக அரசியலும் ஜனரஞ்சகப்படுத்தப்பட்டது தான்.

கொள்கைகள், சித்தாங்கள் என்பதை தாண்டி எம்ஜிஆர் வெர்சஸ் கலைஞர் என்கிற பிம்பம் தான் தமிழக அரசியலை 1990கள் வரை வழிநடத்தியது. அதன் பிறகு அந்த பிம்பம் ஜெயலலிதா வெர்சஸ் கலைஞர் என்றானது. இரு பெருத் தலைவர்கள் மறையும் வரை இடஒதுக்கீடு, சமூக நீதி என்கிற விஷயத்தில் இரண்டு கட்சிகளும் எந்தவித சமரசமும் செய்து கொள்ளவில்லை. இதே நிலைப்பாட்டில் தான் தற்போதைய திமுக மற்றும் அதிமுக தலைமைகளும் செயல்பட்டு வருகின்றன. இருந்தாலும் கூட இரண்டு கட்சிகளும் எதிரெதிர் துருவங்களாகவே உள்ளன.

இந்த திமுக மற்றும் அதிமுக எனும் இரண்டு கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சி அமைக்க முடிகிறது. கொள்கைகள் ஒன்றாக இருந்தாலும் கலைஞரா, ஜெயலலிதாவா என்கிற மனநிலையில் தான் மக்கள் வாக்களித்து வந்தனர். தற்போது தமிழக அரசியலில் அப்படி ஒரு சூழல் இல்லை. மு.க.ஸ்டாலினையோ, எடப்பாடி பழனிசாமியையோ மக்கள் ஒரு மாபெரும் தலைவராக கருதவில்லை. ஆனால் அப்படி தலைவராக வேண்டும் என்று தான் இருவருமே முயற்சித்து வருகிறார்கள். அதே சமயம் இரண்டு கட்சிகளும் தங்கள் அடிப்படை கொள்கை என்கிற விஷயத்தில் எவ்வித மாற்றத்திற்கும் தயாராக இல்லை.

இப்படியான சூழலில் தமிழகத்தில் எப்படியாவது மாற்று அரசியலை புகுத்திட வேண்டும் என்று ஒரு தரப்பு தீவிரமாக முயற்சித்து வருகிறது. மத்தியில் மிருக பலத்துடன் ஆட்சியில் இருக்கும் பாஜக, தமிழகத்தில் தாமரையை மலர வைக்க தலைகீழாக நின்று தண்ணீர் குடித்து வருகிறது. வட மாநிலங்களில் ஸ்ரீராமர், பாகிஸ்தான், தேச பக்தி என்கிற மூன்று விஷயங்களை முன்வைத்து பாஜக செய்து வரும் அரசியல் தமிழகத்தில் எடுபடவில்லை. இந்த நிலையில் தான் பாஜகவிற்கு முருகப் பெருமான் கை கொடுத்துள்ளார்.

கறுப்பர் கூட்டம் விவகாரத்தில் பாஜகவினர் முருகப் பெருமானை தூக்கிப் பிடித்தது அவர்களே எதிர்பார்க்காத சாதகமான விளைவுகளை தமிழக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்து மதத்தை, இந்து கடவுள்களை நிந்திப்பவர்களை எதிர்க்க தமிழகத்தில் ஆளே இல்லை என்கிற நிலையில் கறுப்பர் கூட்டத்தை கதறவிட காரணமாக இருந்தது பாஜக என்றால் அதில் மறுப்பு சொல்ல முடியாது. ஸ்ரீராமரை வைத்து அரசியல் செய்ய நினைத்த பாஜகவிற்கு தமிழகத்தில் முருகப்பெருமானால் தான் எதிர்காலம் என்பதை உணர்ந்து கொண்டது.

இருந்தாலும் கூட பாஜகவில் வலுவான மக்களை ஈர்க்க கூடிய தலைவர்கள் இல்லை. ஆனால் முருகப்பெருமான் விஷயத்தில் பாஜகவின் நிலைப்பாட்டை ஒத்து நடிகர் ரஜினி கருத்து தெரிவித்துள்ளார். இது தான் தமிழக அரசியலை அடுத்தடுத்து சில மாதங்களுக்கு நகர்த்திச் செல்லக்கூடியது. இடஒதுக்கீடு, சமூக நீதி போன்ற விஷயங்களில் ஆர்வம் காட்டாத ரஜினி, முருகப்பெருமானுக்கு ஆதரவாக களம் இறங்கியது அவரது அரசியல் நிலைப்பாட்டை தெளிவாக காட்டுகிறது. ஏற்கனவே ஆன்மிக அரசியல் என்று ரஜினி கூறியது முழுக்க முழுக்க திராவிட அரசியலுக்கு எதிரானது தான் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

தமிழகத்தில் ஜாதி ரீதியான வாக்கு வங்கி உண்டு. ஆனால் தமிழக மக்கள் மதங்களின் அடிப்படையில் வாக்களிப்பது மிக மிக குறைவு. சிறுபான்மை சமுதாய மக்களில் பெரும்பாலானவர்கள் மதத்தை பார்த்து வாக்களிப்பதாக கருதியே அவர்களுக்கு திமுக மற்றும அதிமுக எப்போதும் துணை நிற்கிறது. ஆனால் இந்துக்களை பொறுத்தவரை அவர்கள் மதம் பார்ப்பதில்லை என்பதால் தான் திமுகவும், அதிமுகவும் இந்துக்களி நம்பிக்கையை பொருட்படுத்துவதில்லை.

ஆனால் இந்த விஷயத்தில் ரஜினி செய்யும் அரசியல் தான் அவருக்கான வாக்கு வங்கியாகும் என்று கணக்கு போடப்பட்டுள்ளது. திராவிட வாக்கு வங்கியை உடைக்க வேண்டும் என்றால் புதிதாக ஒரு வாக்கு வங்கி உருவாக வேண்டும். அதனை மத அடிப்படையில் அதே சமயம் மற்ற மதங்களை நிந்திக்காமல் செய்ய வேண்டும் என்கிற திட்டத்தில் தான் ரஜினி கந்தனுக்கு அரோகரா என்று முழங்கியுள்ளார். அதே சமயம் மற்ற மதங்கள் விஷயத்தில் வட நாட்டில் பாஜக எடுத்துள்ள நிலைப்பாட்டிற்கு நேரெதிரான நிலைப்பாட்டைத்தான் ரஜினி எடுப்பார். எக்காரணம் கொண்டும் மற்ற மதங்களின் நம்பிக்கையை கொச்சைப்படுத்துவதோ அல்லது விமர்சிப்பதோ கூடாது என்பதில் ரஜினி உறுதியாக உள்ளார்.

ஆன்மிக அரசியல் என்கிற பெயரில் இந்துக்களை ஒன்று திரட்டி வாக்கு வங்கியை உருவாக்கிவிட்டால் தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் பாதையை உருவாக்க முடியும் என்று ரஜினிக்கு கூறப்பட்ட யோசனையைத்தான் அவர் பின்பற்றுவதாக சொல்கிறார்கள். அதற்கு கை மேல் பலனாக, ரஜினி முருகப்பெருமானுக்கு ஆதரவாக, தமிழ்க்கடவுளுக்கு ஆதரவாக, இந்துக்களுக்கு ஆதரவாக களம் இறங்கிவிட்டார், கருத்து கூறி விட்டார், ஸ்டாலின் ஏன் இப்படி செய்யவில்லை என்கிற கேள்விகள் எழ ஆரம்பித்துள்ளன.