தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில், எல்லா கட்சிகளும் அதற்கான பணிகளை முன்னெடுக்கத் தொடங்கிவிட்டன. 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தன்னுடைய படையும் இருக்கும் என்று அறிவித்த ரஜினி, பின்னர் சினிமாவில் பிஸியானார். இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பிறகு தொடர்ந்து வீட்டிலேயே முடங்கிக்கிடக்கிறார். தன்னுடைய உடல் நிலையைக் கருத்தில்கொண்டு அரசியலில் ஈடுபடமாட்டார் என்றும் தகவல்கள் உலா வந்தன.
தன்னுடைய அரசியல் நிலைப்பாடு குறித்து மன்ற நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து முடிவை அறிவிப்பேன் என்றும் ரஜினி ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் அரசியல் குறித்து இறுதி முடிவை அறிவிப்பதற்காக, நாளை தன் மக்கள் மன்ற மாவட்ட செயலர்களுடன் ஆலோசிக்க இருப்பதாக ரஜினி அறிவித்துள்ளார்.
இதற்காக, அனைத்து மாவட்ட செயலர்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் நாளை காலை 9 மணிக்குத் தொடங்கும் இந்த கூட்டத்தில் 50 மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்க இருக்கிறார்கள். இக்கூட்டத்தில் மாவட்ட செயலர்களுடன் ஆலோசிக்கும் ரஜினி, அதன்பின்னர் தன் அரசியல் நிலைப்பாடு குறித்த முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.