டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அடுத்த முறம்பு பகுதியில் தேவநேயப் பாவாணரின் 119 வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய அவர்,  ’’ரஜினிகாந்த் தொடங்கும் கட்சியுடன் பா.ம.க கூட்டணி அமைக்கும் என்ற தமிழருவி மணியனின் கருத்து அவருடைய எத்தனையோ கனவுகளில் இதுவும் ஒன்றாக தெரிகிறது. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மதமாற்ற சட்டத்தை கொண்டுவந்தபோது அதற்கு எதிர்ப்பின் அடையாளமாக தமிழகத்தில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் தமிழ் பெயர் சூட்டும் விழா நடத்தினோம்.

 

டி.என்பி.எஸ்.சி தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. அந்த முறைகேட்டில் யார் சம்பந்தப்பட்டு இருந்தாலும் அமைச்சர்களாக இருந்தாலும் வேறு பின்னனி உள்ளவர்களாக இருந்தாலும் தமிழக அரசு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படிப்பட்ட தேர்வு ஆணையங்களில முறைகேடு நடந்தால் நீதி கிடைக்காது. இது சமுகத்தில் மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும்.

வருகிற 22 ஆம் தேதி திருச்சியில் CAA, NPR, NRC ஆகியவற்றை எதிர்த்து தேசம் காப்போம் பேரணி நடத்துகிறோம். அதில் கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். தமிழருவி மணியன் ரஜினிகாந்த் தலைமையில் பாமக இணைந்து ஆட்சி அமைக்கும் என்று கூறி வருவது அவர் எத்தனையோ கனவுகள் கண்டு வருகிறார். அவருடைய கனவு இதுவரை பலித்ததில்லை. இப்போதும் அவரது கனவை வெளிபடுத்தி இருக்கிறார் பொருத்து இருந்து பார்ப்போம்’என்று தெரிவித்தார்.