சென்னையில் வெங்கய்யா நாயுடு புத்தக வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று புகழ்ந்த எடப்பாடியார் மூன்றே மாதத்தில் ரஜினியை கடுமையாக விமர்சித்திருப்பது தமிழக அரசியலின் புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

தமிழக அரசியலில் ரஜினி எதிர்ப்பு என்பது அதிமுகவின் மிக முக்கியமான அரசியல் நகர்வாக இருந்தது. 1996ம் ஆண்டு ரஜினி திமுகவிற்கு வாய்ஸ் கொடுத்தது முதலே ஜெயலலிதாவின் எனிமி நம்பர் 2வாக இருந்தார் ரஜினி. ஆனால் 2001 தேர்தல் வெற்றிக்கு பிறகு பக்குவப்பட்ட ஜெயலலிதா, ரஜினியின் மகள் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துவிட்டு வந்தார்.

இதன் பிறகு அதிமுக – ரஜினி மோதல் முடிவுக்கு வந்தது. பிறகு பாமக நிறுவனர் ராமதாஸ் தற்போது நாம் தமிழர் கட்சிகள் ரஜினி எதிர்ப்பு அரசியல் செய்து வருகின்றன. திமுக மறைமுகமாக ரஜினி எதிர்ப்பு அரசியலை முன்னெடுத்து வருகிறது. சமூக வலைதளங்களில் ரஜினிக்கு எதிரான தீவிர பிரச்சாரத்தை முன்னெடுப்பது திமுக சமூக வலைதளப் பிரிவு தான்.

ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ரஜினியை பெரிய அளவில் அதிமுக கண்டுகொள்ளவில்லை. சொல்லப் போனால் ரஜினியுடன் சுமூக உறவைத் தான் அதிமுக பெருந்தலைகள் விரும்பின. சொல்லப்போனால் ரஜினிக்கு மத்திய அரசின் விருது கிடைத்த உடன் பாராட்டியவர்கள் அனைவரும் அதிமுகவினர் தான். இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி தமிழகத்தில் ஆளுமை மிக்க தலைமைக்கு வெற்றிடம் உள்ளதாக கூறியிருந்தார்.

இதற்கு அன்றைய தினமே எடப்பாடி பதில் அளித்திருந்தார். இடைத்தேர்தல் வெற்றி மூலமாக தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை என்பதை அதிமுக நிரூபித்துவிட்டதாக கர்ஜித்திருந்தார். இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினியிடம் அது பற்றி கேட்ட போது கருத்து கூற விரும்பவில்லை என்று கூறி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆனால் எடப்பாடியார் கோவையில் போட்ட வெடி மீண்டும் போயஸ் கார்டனில் வெடிக்கும் என்கிறார்கள்.

ஏனென்றால் ரஜினி எந்த கட்சிக்கு தலைவர்? அவர் என்ன அரசியல் கட்சி ஆரம்பித்துவிட்டாரா? அவர் ஒரு நடிகர். அவ்வளவு தான் என்று ரஜினியை பற்றிய கேள்விக்கு பட்டாசாக வெடித்துள்ளார் எடப்பாடியார். அதாவது ஸ்டாலினை பற்றி கேள்வி கேட்டால் எடப்பாடியார் எப்படி வெடிப்பாரோ அதே போல் வெடித்துள்ளார். அப்படி என்றால் ஸ்டாலின் மட்டும் அல்ல எடப்பாடியும் கூட ரஜினியை அரசியல் எதிரியாக கருதுவதாகவே இந்த பேட்டி காட்டுவதாக கூறுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.