தமிழகத்தில் 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு அதிரடியாக தயாராகி வருகிறார் கமல் ஹாசன். மக்கள் நீதி மய்யம் கட்சிக்காக அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் பணியாற்றி வருகிறார். கட்சி கட்டமைப்பு, பிரசார வியூகம் போன்ற வி‌ஷயங்களில் அவரது ஆலோசனைப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கமல்ஹாசன் வருகிற 7-ம்தேதி தனது 65-வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். வழக்கமாக பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்க்கும் கமல், இந்த முறை பெரும் விழாவுக்கு திட்டமிட்டுள்ளார்.

7, 8, 9 ஆகிய மூன்று நாட்கள் கமல் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. பிறந்தநாள் அன்று 7-ம் தேதி காலை கமலின் தந்தைக்கு சொந்த ஊரான பரமக்குடியில் சிலை திறக்கப்பட உள்ளது. அந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார். அன்று பரமக்குடியில் இளைஞர்களுக்கான வளர்திறன் மேம்பாட்டு மையம் தொடங்கப்பட உள்ளது. 8-ம் தேதி சென்னையில் தனியார் திரையரங்கில் காந்தியின் 150-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு ஹே ராம் படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டு கலந்துரையாடல் நடக்க இருக்கிறது.

இதில் கமல் கலந்துகொண்டு கலந்துரையாடலில் பங்கேற்கிறார். ஹே ராம் படக்குழுவினரும் கலந்துகொள்வார்கள். அன்றைய தினமே கமலின் அலுவலகத்தில் கே.பாலச்சந்தருக்கு சிலை திறக்கப்படுகிறது.

அடுத்த நாள் 9-ம் தேதி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ’உங்கள் நான்’என்ற பிரம்மாண்டமான கலை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதில் ரஜினிகாந்த், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட தமிழ், இந்தி, தெலுங்கு திரை பிரபலங்களும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், கேரள முதல்வர் பினராயி விஜயன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரும் கலந்துகொள்கின்றனர்.

கமல் பிறந்தநாள் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் ஒரு பக்கம் நடந்துகொண்டு இருக்க கட்சி கட்டமைப்பில் மேற்கொண்டு வரும் மாற்றங்களும் வேகம் எடுத்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்சிக்கு புதிய பொதுசெயலாளர்கள் நியமிக்கப்பட்டனர்.