'திடீரென பேட்டி கொடுக்கக் கூடியவர்களுக்கு, அவர்களின் பெற்றோர் பிறந்த இடமும், தேதியும் சரியாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ரஜினியை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

தி.மு.க., தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ’இஸ்லாமிய அமைப்பினர், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு, எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என, வலியுறுத்தி உள்ளனர். அப்போது, 'நான் பிறந்த இடம், தேதி, அதற்கான சான்றிதழ் இருக்கிறதா என, எனக்கு தெரியவில்லை. எனக்கே ஆபத்து வரும் போல இருக்கிறது' என, முதல்வர் எடப்பாடி கூறியிருக்கிறார்.

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தாலும், அதன் தொடர் நடவடிக்கையாலும், முதல்வர் பதவியில் எப்படியாவது நீடிக்க வேண்டும் என்பதற்காக, எதையும் அடமானம் வைக்கும், முதல்வர் எடப்பாடிக்கு ஆபத்து வரும் நிலை உள்ளது. அவருக்கு மட்டுமல்ல, திடீரென பேட்டி கொடுக்க கூடியவர்களுக்கும், அவர்களின் பெற்றோர் பிறந்த இடமும், தேதியும் சரியாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

எனவே, நம்மை விமர்சிப்பவர்களையும் சேர்த்து, அனைவரையும் பாதுகாக்கவே, இந்த கையெழுத்து இயக்கத்தை நடத்தினோம். இதுவரையில், 2 கோடிக்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டு உள்ளனர். இவற்றை, ஜனாதிபதியிடம் அளிக்க உள்ளோம். அதன்பின்னும், மத்திய அரசு பரிசீலிக்க தவறினால், அடுத்த கட்டப் போராட்டத்தை முன்னெடுப்போம். பிப்., 14ல் துவங்கும், சட்டசபை பட்ஜெட் கூட்ட தொடரிலாவது, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்’’என அவர் கூறியுள்ளார்.