ஜெயலலிதா மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை ரஜினியால் மட்டுமே நிரப்ப முடியும்… புதிய வால் போஸ்டர்களால் பரபரப்பு…

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் ஓர் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக ஒரு கருத்து நிலவுகிறது. ஜெ க்குப் பிறகு அதிமுக வின் பொதுச் செயலாளராக அவரது தோழி சசிகலா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சசிகலாவை அக்கட்சியின் அமைச்சர்கள்,எம்.பி க்கள்,எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மட்டுமே ஆதரிக்கிறார்கள். ஆனால் அடிமட்டத் தொண்டகள் சசிகலாவை ஏற்கவில்லை என்றும், ஜெ.வின் அண்ணன் மகள் தீபா கட்சித் தலைமை பொறுப்பேற்க வேண்டும் என்ற கருத்தும் நிலவுவதாக கூறப்படுகிறது.

இப்பிரச்சனையில் ஆளாளுக்கு கருத்துக்கள் கூறி வருவதால் தொண்டர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழக  அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாகவே அதிமுக தொண்டர்கள் உணர்வதாக கருதுகின்றனர்.

இந்நிலையில்தான் சென்னை மற்றும் திருச்சியில் ஒட்டப்பட்டுள்ள புதிய வேல் போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என அவரது ரசிகர்கள் ஆயிரக்கணக்கான வால் போஸ்டர்களை சென்னை மற்றும் திருச்சியில் ஒட்டியுள்ளனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை கருணாநிதி,ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக மக்களிடையே ரஜினிக்கு அபரிமிதமான செல்வாக்கு இருந்து வருகிறது. இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவரது ரசிகர்கள் பெரிதும் விரும்புகின்றனர்.

மக்களின் எண்ணத்தை அறிந்து 1996 ரஜனி கொடுத்த வாய்ஸ் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அது போன்று தற்போதும் ரஜினி முழுமூச்சுடன் அரசியலில் இறங்க வேண்டும் என விரும்புகின்றனர்.

தலைமை ஏற்க மக்கள் அழைக்கிறார்கள்…தொண்டர்கள் நாங்கள் இருக்கிறோம்… என்று அச்சிடப்பட்ட போஸ்டர்களில் ரஜினி கோட்டையில் நின்று கையை அசைத்தபடி இருப்பதைப் போன்று வால் போஸ்டர்கள் நகரெங்கும் ஒட்டப்பட்டுள்ளன.

வாய்ப்பு தானாக வராது…வந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ரஜினி திரைப்படங்களில் பேசிய வசனம் தற்போது அவருகே பொருந்துவதாக ரசிகர்கள் உற்சாகமாக தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசியலில் அடுத்த ஆட்டத்தை ரஜினி ரசிகர்களே தொடங்கியுள்ளனர்.