முழுசாக பதிமூன்று மாசங்களும், சில சொச்ச நாட்களும் முடிந்துவிட்டன. ‘நான் அரசியலுக்கு வருவது உறுதி!’ என்று அறிவித்து. அவர் இன்னும் அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை! என்பது இப்போது விஷயமல்ல, இன்னமும் தன் மன்றத்தையே தன் கட்டுப்பாட்டிற்குள் அவரால் கொண்டு வர முடியவில்லை என்பதுதான் பிரச்னையே. 

ரஜினியின் மக்கள் மன்றத்தின் அமைப்பு செயலாளராக இருந்த இளவரசன் சமீபத்தில் அதிலிருந்து விலகினார். தன் ராஜினாமாவை கொடுக்கும் முன் சில விஷயங்களை தெளிவாக ரஜினியிடம் விளக்கியிருக்கிறார் இளவரசன், கிட்டத்தட்ட பாவ மன்னிப்பு கேட்பது போன்றதும், இந்த பாவத்தை நீங்களும் பண்ணிவிடாதீர்கள்! என்று எச்சரித்தது போன்ற சம்பவமும் அது! என்கிறார்கள் அந்த சமயத்தில் அங்கிருந்த ரஜினி வட்டார நபர்கள்.

 

என்ன நடந்ததாம்?...

”கெடுபிடியான, தடாலடியாய் பேசும் மனிதர் இளவரசன். எங்கேயோ இருந்த இவரை திடீர்னு தலைவர் இப்படியொரு இடத்துல உட்கார வைத்ததை யாருமே விரும்பலை. ஆனால் அவரோட வயசு அனுபவமும், படிப்பும் மன்றத்துக்கு உதவும்னு தலைவர் நினைச்சார். மக்கள் மன்ற நிர்வாகத்துல சில கோஷ்டிகள் இருக்குது. அதில் முக்கியமானது தூத்துக்குடி ஸ்டாலின் கோஷ்டி, ரிட்டயர்டு ஐ.பி.எஸ். அதிகாரி ராஜசேகர் கோஷ்டி. மோசமா உள்ளுக்குள்ளே மோதிக்கும் இந்த ரெண்டு கோஷ்டிக்கும் நடுவுல தனி ஆவர்த்தனம் நடத்திட்டு இருந்தார் இளவரசன்.  

பிரச்னைனளோடு தன்னை சந்திக்க வர்ற மன்றத்தினரை, நிர்வாகிகளை பொறுமையாக அணுகாம, அதிரடியா தாம்தூமுன்னு பேசுறது இளவரசனின் வழக்கமா இருந்துச்சு. சின்ன பிரச்னைக்கு கூட பெரிய நடவடிக்கையை எடுத்து பல நிர்வாகிகளை தூக்கி வெளியில் வீசினார். தலைவரும் இவருடைய உண்மை முகம் தெரியாமல் சப்போர்ட் பண்ணினார். என்னதான் ரஜினி தனக்கு ஆதரவா நின்னாலும் கூட ஸ்டாலின் மற்றும் ராஜசேகரை தாண்டி இவரால் மன்றத்தில் சில வேலைகளை பண்ண முடியலை. அதனாலதான் ராஜினாமா பண்ணினார். 

இந்த முடிவை தலைவரிடம் சொல்றதுக்காக வந்த இளவரசன், “நான் சில தப்புகள் பண்ணிட்டேன். அறியாமல், தெரியாமல் சின்ன சின்ன தப்புகளை பண்ணிய பதினைந்து பேரை மன்றத்திலிருந்து நீக்கிட்டேன். ஆனா அவ்வளவு பெரிய தண்டனை அவங்களுக்கு தேவையில்லை. உண்மையிலேயே அவங்க உங்க மேலே ரொம்ப பெரிய விசுவாசமும், அன்பும் வெச்சிருக்காங்க. அவங்களை காயப்படுத்துனதுக்கு நான் பாவமன்னிப்பு கேட்டுக்கிறேன். உடனடியா அவங்களை அழைச்சு, சேர்த்துக்குங்க. 

ஆனால் அதேவேளையில் வேறு சில பேர் உங்க பெயரையும், நீங்க கொடுத்திருக்கிற பதவியின் அதிகாரத்தையும் வெச்சு மன்றத்தில் பெரிய அரசியல் பண்ணிட்டு இருக்கிறாங்க. பெரிய அரசியல்வாதிகளே பிச்சை எடுக்கணும் இவங்ககிட்ட. இந்த நபர்களை நம்பி நீங்க கட்சி ஆரம்பிச்சு, களமிறங்கினால் பிரச்னைகளை மட்டும்தான் சந்திப்பீங்க. உங்களை தங்களோட திமிர்தனத்தால் நிச்சயமா கவிழ்த்துடுவாங்க, மனம் நொந்துடுவீங்க. இதை என்னோட அறிவுரையாக, கருத்தாக இல்லாம, எச்சரிக்கையாகவே கூட  எடுத்துக்குங்க. ஆனா உங்க நல்லதுக்காக மட்டுமே சொல்றேன். ரசிகர்களை நம்புங்க, இந்த நபர்களை அல்ல.” அப்படின்னு சொல்லி கைகூப்பிட்டார். 

இரும்பு மனுஷனாட்டமா தடாலடி பண்ணிட்டிருந்த இளவரசன் கலங்கி நின்னு கைகூப்ப, தலைவருக்கு கண் கலங்கி, சட்டுன்னு கண்ணீ வந்துடுச்சு. தன் வலது கை யின் பெருவிரல், ஆட்காட்டி விரல்களால் ரெண்டு கண்களையும் சில நொடிகள் மூடிக்கிட்டார். இளவரசன் கிளம்புறதாலே மட்டுமில்லை, தன் பெயரை சொல்லிக்கொண்டு ஆட்டம் போடும் தன் நிழல்களை நினைச்சுதான் இந்த கவலை. பிறகு கண்ணை திறந்தவர், ‘நான் கவனிச்சுக்குறேன்’ அப்படின்னார்.” என்று முடித்தார்கள். பாவம்தான் ரஜினி!