Rajinikanth congratulates Karunanidhi on...

நாம் பெரிதும மதிக்கும் மரியாதைக்குரிய பெரியவர் கருணாநிதிக்கு மனமார்ந்த வாழ்த்து தெரிவிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி உடல்நல குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகி, கோபாலபுரம் இல்லத்தில்
ஓய்வெடுத்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் அவருடைய பிறந்தநாளை தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். 

கருணாநிதியின் 95-வது பிறந்தநாளையொட்டி தமிழகம் ழுவதும் தி.மு.க.வினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். மருத்துவ முகாம், ரத்ததான முகாம், கவியரங்கம், வாழ்த்தரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் ஆகிய நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்துள்ளனர்.

கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி அவரது இல்லம் அமைந்துள்ள கோபாலபுரம் விழாக்கோலம் பூண்டது. கொடிகள், தோரணங்களால் என தெருக்கள் அலங்கரிக்கப்பட்டன. திமுக தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கோலாகலாக கருணாநிதியின் பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றனர்.

சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி, தங்களை நிச்சயம் சந்திப்பார் என்ற நம்பிக்கையின்பேரில், திமுக தொண்டர்கள் கோபாலபுரத்தில் குவிந்தனர். அப்போது, தொண்டர்களைப் பார்க்க கருணாநிதி வாசலுக்கு வந்தார். 

கருணாநிதியைப் பார்த்த தொண்டர்கள் வெகுவாக ஆர்ப்பரித்தனர். அப்போது, கருணாநிதி தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார். இதனால் தொண்டர்கள் மேலும் உற்சாகமடைந்தனர். 

கருணாநிதிக்கு, பிரதமர், அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர் - நடிகைகள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கருணாநிதிக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரஜினிகாந்த், தனது டுவிட்டர் பக்கத்தில், நாம் பெரிதும் மதிக்கும் மரியாதைக்குரிய பெரியவர் கருணாநிதிக்கு மனமார்ந்த வாழ்த்து என்று பதிவிட்டுள்ளார்.