ரஜினிகாந்த் முழுமையாக மதுவிலக்கு வேண்டும் என்று சொன்ன கருத்து உண்மையாகவே நல்லது. அதற்காக அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். 

அவர் அரசியலுக்கு வரப்போகிறாரா? இல்லையா என்பது தனிப்பட்ட விஷயம். ஆனாலும், இந்த விஷயத்தில் அவரது கருத்துக்கு முழுமையான ஆதரவு எழுந்து வருகிறது. மதுவிலக்கு வேண்டும் என்பது உடல் ஆரோக்கியம், நலம் சார்ந்தவைக்காக மட்டும் சொல்லவில்லை. அதில் உள்ள பொருளாதாரத்தை உணர வேண்டும். இன்றைய காலகட்டத்தில் எத்தனை பேர் வேலை போகிறார்கள். எவ்வளவு நாள் சம்பளம் கிடைக்கிறது? கையிலிருக்கும் பணம் எவ்வளவு நாள் செலவுக்கு தாங்கும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

இப்போது அவர்கள் கையில் வைத்திருக்கும் பணத்தை செலவழித்து விட்டார்கள் என்றால் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் கழித்து செலவுக்கு என்ன செய்வார்கள்? ஆகையால்தான் மது வேண்டாம் என்கிறோம். ரஜினி சொன்னார் என்பதற்காக நாம் இதை வரவேற்கவில்லை. ஆனால், ஆளும்கட்சியை சேர்ந்த ஒருவர் மதுவிலக்கு கோரிக்கை விடுப்பவர்கள் எல்லாம் குடிக்க மாட்டார்களா? எனக் கேட்டிருக்கிறார். இது தவறான பேச்சு.

வசதி உள்ளவன் குடிக்கிறான் குடிக்காமல் போகிறான். அது அவர்களது விருப்பம். அது பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பணம் டாஸ்மாக் கடைக்கு செல்கிறது. வருமானம் இல்லாமல் அடுத்து என்ன செய்யப் போகிறார்கள் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இதில் இருந்து மீள முடியாமல் போனால் எப்படி குடும்பத்தை காப்பாற்றுவார்கள்?

ஆகையால் முழுக்கமுழுக்க பொருளாதார கண்ணோட்டத்தில் இதை பார்க்க வேண்டும். குறைந்த பட்சம் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு இந்த டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது. நிரந்தரமாக மதுக்கடைகளை மூடச் சொல்லி மருத்துவர் ராமதாஸ் அவர்கள் தான் பல ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார். இப்போது ரஜினி அதற்காக குரல் கொடுத்துள்ளார். தமிழகத்தில் இருந்து நிரந்தரமாக மதுக்கடைகளை மூடினால் நல்லது’’என்கிறார் வருமான வரித்துறை ஓய்வு பெற்ற அதிகாரி பாஸ்கர் கிருஷ்ணமூர்த்தி.