யாகங்கள் சிறப்பு பூஜைகள் செய்ய ரஜினியிடம் இருந்து அனுமதி கிடைத்த காரணத்தினால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு நடிகர் ரஜினியின் சகோதரர் சத்தியநாராயணா தனது மருமகனுடன் வருகை தந்திருந்தார். பின்னர் அங்கு சிறப்பு பூஜைகள் மற்றும் யாகங்கள் நடைபெற்றன. இந்த நிகழ்விற்கு செய்தியாளர்கள் முறைப்படி அழைக்கப்பட்டிருந்தனர். இதனை அடுத்து காலையில் தொடங்கிய யாகம் சுமார் 4 மணி நேரம் நடைபெற்றது. 

இந்த யாகத்தை முதலில் சத்தியநாராயணா தான் நடத்துவதாக கருதப்பட்டது. பின்னர் விசாரித்த போது தான் கடலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் யாகம் நடத்தப்பட்டது தெரியவந்தது. எதற்காக இந்த காரணம் என்று ரசிகர்களிடம் பேச்சு கொடுத்த போது, வரும் 2021ம் ஆண்டு ரஜினி தமிழக முதலமைச்சராக வேண்டும் என்று யாகம் நடத்துவதாக ஒரே போடாக போட்டனர். 

மேலும் எதிரிகளை சமாளிக்க கூடிய ஆற்றல் ரஜினிக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவதாக தெரிவித்தனர். பொதுவாக ரஜினி ரசிகர் மன்றத்தினர் மேலிடத்தின் அனுமதி இல்லாமல் எந்த செயலிலும் ஈடுபடுவதில்லை. ஆனால் சிறப்பு பூஜை மற்றும் யாகத்திற்கு ரஜினியின் சகோதரர் சத்தியநாராயணா வந்திருந்தது மேலும் கேள்விகளை எழுப்பியது.

இதற்கு பதில் அளித்த ரசிகர்கள் ரஜினியை மாவட்டச் செயலாளர் நேரடியாக சந்தித்து இந்த யாகத்திற்கு அனுமதி பெற்றதாக கூறி அதிர வைத்தனர். அதாவது ரஜினி முதலமைச்சராக யாகம் நடத்த ரஜினியே அனுமதி கொடுத்துள்ளது இதன் மூலமாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து யாகம், பூஜைகள் சிறப்பாக நடைபெற்று முடிந்தன. இதன் பிறகு சத்தியநாராயணா செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது ரஜினி நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ யாகம் செய்ததாக கூறினார். அவரிடம் ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதனை சரியான நேரத்தில் ரஜினி தான் அறிவிப்பார் என்று முடித்துக் கொண்டு புறப்பட்டார் சத்தியநாராயணா.