மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி இன்று தனது 69 ஆவது பிறந்த நாளை மிக எளிமையாக கொண்டாடினார்.

திமுகவின் அசைக்க முடியாத புள்ளி, தென் மண்டல செயலாளர், மத்திய அமைச்சர் என அதிகார மையமாக செயல்பட்டு வந்த மு.க.அழகிரி  கடந்த 2014  ஆம் ஆண்டு திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்டு வந்தார் என அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

திமுகவிக்கு எதிரான அழகிரியின் செய்லபாடுகளால்தான் கடந்த தேர்தலில் திமுக தோற்றது என்றுகூட ஒரு தகவல் பரவலாக இருந்து வந்தது. ஆனால் திமுகவில் தன்னை இணைத்துக் கொள்ள அவர் படாதபாடு பட்டார்.

கருணாநிதி மரணம் அடையும் வரை அவரால் திமுகவில் இடம் பிடிக்க முடியவில்லை. அதற்குப் பிறகும் தன்னை திமுகவில் இணைத்துக் கொள்ள வேண்டும் என போராடினார். ஆனால் ஸ்டாலின் அதற்கு இடம் கொடுக்கவில்லை. அவரும் பத்திரிக்கையாளர் சந்திப்பு, லட்சம் பேர் பேரணி என என்னென்னவோ செய்து பார்த்தார், ஆனாலும் அவர் கனவு பலிக்கவில்லை. எஇதையடுத்து அழகிரி கடந்த சில மாதங்களாவே அரசியலைவிட்டு ஒதுங்கியே நிற்கிறார்.

அவ்வப்போது அவர் பாஜகவில் இணையப்போகிறார்… ரஜினியுடன் இணைப் போகிறார் என தகவல்கள் மட்டும் றெக்கை கட்டிப் பறக்கும்.

இந்நிலையில் அழகிரி  இன்று தனது 69 ஆவது  பிறந்தநாளை கொண்டாடினார். எப்போதுமே அவர் பிறந்த நாளன்று  தனது தந்தை கருணாநிதியை சந்தித்து ஆசி பெறுவது வழக்கம், அனால் அவர் மறைந்து விட்டதால் இன்று அவர் தனது பிறந்த நாளை மிக எளிமையாக கொண்டாடினார்.

இதைனிடையே நடிகர் ரஜினிகாந்த், மு.க.அழகிரியை தொலைபேசியில் தோடர்பு கொண்டு வாழ்த்தினார். அப்போது அரசியல் காலண்டரில் கடைசிப்பக்கம் என்பது யாருக்குமே இல்லை என்றும் எதிர்காலத்தில் எழுந்து வருவீர்கள் என்றும் வாழ்த்து தெரிவித்தார்.