ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் சிறைக்குத்தான் செல்வார் எனக்கூறி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அதிர வைத்துள்ளார். 

ஏடாகூடாக பேசி சிலநேரங்களில் தான் இருக்கும் கட்சியையே கதறடிப்பவர் சுப்ரமணியசாமி. எதிர்கட்சிகளை சிக்க வைப்பதிலும், பதிலடி கொடுப்பதிலும் சுப்ரமணியசுவாமிக்கு நிகர் தற்கால அரசியலில் யாரும் இல்லை. ஆனாலும் அவரை பாஜகவே கண்டிக்க முடியாது. இப்போது ரஜினிகாந்தை வம்பிற்கிழுத்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், ’’ரஜினிகாந்த் இறுதிவரை அரசியலுக்கு வரமாட்டார். வந்தால் சிறைக்குத்தான் போவார். நான் ஒரு பிராமணர் என்பதால் என்னால் சவுக்கிதார் ஆக முடியாது’’ எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்து மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடந்த ஒருவிழாவில் பேசிய அவர், ’’இந்தியப் பிரதமர் மோடி மற்றும் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இருவருக்கும் பொருளாதாரம் குறித்து ஒன்றும் தெரியாது. உலகப் பொருளாதாரத்தில் இந்தியா 6-ஆவது இடத்தில் உள்ளது. ஆனால், உண்மையில் அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்தபடியாக பொருளாதாரத்தில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. 

எனினும், பிரதமர் மோடி தொடர்ந்து 6 வது இடத்தில் உள்ளோம் என்று கூறிவருகிறார். ஒரு நாட்டின் பொருளாதாரம் மக்களின் வாங்கும் சக்தியை பொருத்தத்து தான் கணக்கிட வேண்டும். அந்நிய செலாவணி வைத்துக் கணக்கிடக் கூடாது. அந்நிய செலாவணி இருப்பு நிலைத்தன்மையற்றது’’ என்று அவர் கூறினார்.