நடிகர் விஜய், மற்றும் தயாரிப்பாளர், நிதியாளர் வீடுகளில் தொடர்ச்சியாக நடைபெற்ற 35 மணிநேர விசாரணை முடிவுக்கு வந்ததது. ஆனாலும் விஜய் பெயரை நேரடியாகக் குறிப்பிட முடியாத சிக்கலில் வருமானவரித்துறை இருப்பதாகக் கூறப்படுகிறது.

தர்பார் வசூல் சொதப்பலில் சிக்கி அல்லாடிக் கொண்டிருந்த ரஜினிக்கு உதவி செய்து, தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள ஆளும் வர்க்கம் நினைத்ததால், தர்பாரை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கு பின்னணி நிதியாளராக இருந்த மதுரை அன்புச் செழியனைக் குறிவைத்தது அரசு. விஜய் வீட்டில் வருமானவரிச் சோதனை என்பது தொடங்கிய பரபரப்பில் மறைந்து போனது ரஜினி பெரியார் பற்றி, குடியுரிமைச் சட்டம் பற்றிக் கூறியவை. ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு பெரும் முட்டுக்கட்டையாக இருந்துவரும் விஜயை மிரட்டும் வகையில்தான் வருமான வரிச் சோதனை துவங்கியதாக அரசியல் மற்றும் திரையுலக நோக்கர்கள் கருதுகின்றனர்.
 
விஜய் மட்டுமல்லாது பிகில் படத் தயாரிப்பாளரான ஏஜிஎஸ் அலுவலகம் மற்றும் வீடு, நிதியாளர் அன்புச்செழியன் உள்ளிட்டோரும் ரெய்டு வளையத்துக்குள் வந்தனர். 2 வது நாளாக தொடர்ந்த சோதனையில் அன்புச்செழியன் வீடு, அலுவலகத்தில் ரூ.77 கோடி ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை தரப்பில் அதிகார பூர்வ செய்தித் தகவல் அறிக்கையின் மூலம் ஊடக வட்டத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் நடிப்பில் வெளியான 'பிகில்' படம் வசூலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதாக ரசிகர்கள், படக்குழுவினர், தயாரிப்பாளர் தரப்பில் வெற்றிவிழா கொண்டாடப்பட்டது. முந்நூறு கோடி வசூலானதாகவும் கூறப்பட்டது. இத் தகவலையொட்டி திரட்டப்பட்ட தகவலின் பேரில் இந்த வருமான வரித்துறை சோதனை நடைபெற்றதாக வருமான வரித்துறை அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. ஆனால் அதில் விஜயின் பெயரைச் சுட்டுவதில் தயக்கம் காட்டுகிறது. 
 
இதுகுறித்து வருமான வரித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''முக்கிய நடிகரின் படம் பாக்ஸ் ஆஃபீஸ் வெற்றிபெற்று ரூபாய் 300 கோடி அளவுக்கு வசூல் பெற்றதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், பிப்ரவரி-5 முதல் வருமான வரித்துறை, திரைப்படத் துறையில் உள்ள நான்கு முக்கிய நபர்களிடம் அதிரடி சோதனை நடத்தியது. தயாரிப்பாளர், முக்கிய நடிகர், அவரது படத்தின் பைனான்சியர் மற்றும் விநியோகஸ்தர் ஆகியோர் வீடு, அலுவலகம் உட்படசென்னை மற்றும் மதுரையில் உள்ள 38 இடங்களில் இந்த சோதனை கடந்த இரண்டு நாளாக நடந்தது.

இந்தச் சோதனையில் முக்கியமான அம்சமாக பைனான்சியர் அன்புச்செழியனிடம் கணக்கில் காட்டாப்படாத ரூபாய் 77 கோடி ரொக்கப் பணத்தை சென்னை, மதுரையில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் ரகசிய இடங்களிலிருந்து கைப்பற்றியுள்ளோம். இது தவிர இந்தச் சோதனையில் ஏராளமான சொத்து ஆவணங்கள், பத்திரங்கள், பிராம்சரி நோட்டுகள், காசோலைகள், முன் தேதியிட்ட காசோலைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

ரொக்கப்பணம் நீங்கலாக கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் கணக்குக் காட்டாமல் மறைக்கப்பட்ட பணம் ரூபாய் 300 கோடியைத் தாண்டும் என மதிப்பிட்டிருக்கிறோம். இந்தச் சோதனையின் முக்கிய நபர்களில் விநியோகஸ்தர் ஒருவரும் இருக்கிறார். அவர் கட்டுமானத் தொழில் செய்து வரும் ரியல் எஸ்டேட் அதிபராக இருக்கிறார். அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட அனைத்து ஆவணங்களும் அசலானவை. இந்த ஆவணங்களை அவருக்குச் சொந்தமான இடங்களில் இருந்தும், அவரது நண்பர் சரவணனுக்குச் சொந்தமான இடங்களிலிருந்தும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சோதனையின் மற்றொரு நபரான படத் தயாரிப்பாளருக்கு படச் சந்தையிடல், மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் உள்ளன. பல படங்களைத் தயாரித்துள்ளார். அவரது அலுவலக வரவு- செலவு கணக்குகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அங்கிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியும் நடக்கிறது. அதன் முடிவுகள் இனிமேல்தான் தெரியவரும். சோதனையில் முக்கிய நடிகரின் வீட்டில் கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்களில் அவரது முதலீடு ஆய்வு செய்யப்படுகிறது. இன்னும் சில இடங்களில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறோம்” என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்திக்குறிப்பில் விஜய் வீட்டிலிருந்து எந்தப் பணமும் கைப்பற்ற முடியாத நிலையில், வருமான வரித்துறை விஜயின் பெயரை நேரடியாக குறிப்பிடத் தயங்கியே முக்கிய நடிகர் என்று குறிப்பிட்டிருப்பதாகச் சொல்கிறார்கள் புள்ளீங்கோ.