ரஜினியின் அடுத்தப்படத்தின் பெயர் ‘நாற்காலி’யா? இப்படியொரு கேள்வி திரையுலகில் புயலடித்துக் கொண்டிருக்கிறது. தலைவருக்கு ஆளும் நாற்காலியை பிடித்துக் கொடுப்பதுதான் நம் லட்சியமாக இருக்கணும் என்று அவரது ரசிகர்கள் அல்லும் பகலும் ஆசைப்பட்டுக் கொண்டிருக்கும் போது, ‘நாற்காலி’ என்ற தலைப்பையே வைத்திருப்பதாக செய்தி வந்தால் எப்படியிருக்கும்? ஆனால், நடப்பதே வேறு!

கபாலி, காலா போல ஏமாந்துவிடக் கூடாது என்பதில் படு எச்சரிக்கையாக இருக்கிறாராம் ரஜினி. பேட்ட கொடுத்த உற்சாகத்தில் மீண்டும் பழைய ரஜினியாகி விட்ட அவருக்கு, இனிமேல் வரப்போகிற படங்கள் அத்தனையும் கமர்ஷியல் வெள்ளமாக இருக்க வேண்டும் என்கிற லட்சிய வெறியே வந்திருக்கிறது. காலா, கபாலி படங்களில் சாதி அரசியலை வைத்து படமெடுத்த ரஜினி பேட்ட படத்தில் இந்து -முஸ்லீம் இடையே நடக்கும் ஆணவக் கொலை பற்றிய கதை கையிலெடுத்திருக்கிறார்கள்.

கமர்சியல் விஷயத்திற்காகவே ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன இரண்டு கதைகளை ரிஜக்ட் செய்திருக்கிறார் ரஜினி. இப்போது முருகதாஸ் உருவாக்கிக் கொண்டிருப்பது மூன்றாவது கதை என்கிறார்கள். இன்னும் கதையே ரெடியாகவில்லை. அதற்குள் நாற்காலி என்கிற தலைப்பை மட்டும் எப்படி முடிவு செய்திருப்பார்கள்? அதுதான் புரியவில்லை. இருந்தாலும், ரஜினியின் அரசியல் மூவ், மத்திய அரசின் கருணை பார்வை இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது இருந்தாலும் இருக்கலாம்.

பேட்ட படம் இந்து -முஸ்லீம் இடையே நடக்கும் ஆணவக் கொலை பற்றிய கதை என்பதால் அதில் நிச்சயம் மதம் சார்ந்த அதிரடிக் கருத்துக்கள் இருக்கும். பாஜகவுக்கும் - ரஜினிக்கும் இடையே உரசல் ஏற்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அதையும் தாண்டி பாஜக ரஜினிக்கு முட்டுக் கொடுக்குமா?