ரசிகர் மன்றம் விரைவில் அரசியல் கட்சியாக மாற உள்ள நிலையில் மக்கள் மன்றத்தின் பல்வேறு மாவட்டச் செயலாளர்களுக்கு கல்தா கொடுக்கப்படுவதுடன் சில மாவட்டச் செயலாளர்களுக்கான பொறுப்புகளை குறைக்க ரஜினி முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் மாவட்டச் செயலாளர்களை அழைத்து பேசிய ரஜினி அரசியல் கட்சி ஆரம்பித்த பிறகு நமக்கு முன் உள்ள சவால்களை பட்டியலிட்டார். அதோடு மட்டும் அல்லாமல் திமுக, அதிமுகவிற்கு இணையான நபர்கள் மாவட்டந்தோறும் நமக்கு தேவைப்படுவதையும் ரஜினி சுட்டிக்காட்டியுள்ளார். அதோடு, மாற்று கட்சியில் இருந்து வருபவர்களுக்கு முக்கியத்துவம் மற்றும் உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டிய நெருக்கடி இருப்பதையும் ரஜினி குறிப்பிட்டு பேசியுள்ளார். மேலும் மக்கள் மன்றத்தில் பதவி பெற்றுவிட்டு அதனை வைத்து கல்லா கட்டிய சிலரையும் ரஜினி மறைமுகமாக சாடியிருந்தார்.

மேலும் கடந்த 2017க்கு பிறகு மாவட்ட வாரியாக மக்கள் மன்றப்பணிகள் எப்படி நடைபெற்றுள்ளது என்கிற சர்வே ரிப்போர்ட் தன்னிடம் உள்ளதையும் ரஜினி மாவட்டச் செயலாளர்களிடம் எடுத்துக்கூற மறக்கவில்லை. அப்படியே, தற்போதுள்ள நிர்வாகிகளில் எதிர்பார்க்கும் அளவிற்கு பணியாற்றாதவர்களை மாற்றுவதை தவிர தனக்கு வேறு வழியில்லை என்று ரஜினி வெளிப்படையாகவே அப்போது பேசியதாக கூறுகிறார்கள். இந்த நிலையில் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை ரஜினி கடந்த வாரம் வெளியிட்டார். அதோடு மட்டும் அல்லாமல் கட்சிக்கு இரண்டு முக்கிய நிர்வாகிகளையும் நியமித்துள்ளார்.

ரஜினி மக்கள் மன்ற பணிகளை மேற்பார்வையிடுபவராக தமிழருவி மணியனையும், மக்கள் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தியையும் நியமித்தார். அத்தோடு கடந்த சில மாதங்களாகவே அர்ஜுனமூர்த்தி ரஜினியுடன் தொடர்பில் இருந்துள்ளார். அவருக்கு கொடுத்த முக்கிய அசைன்மென்டே மாவட்ட வாரியாக மக்கள் மன்றப்பணிகளை கண்காணிப்பது தான். ரகசியமாக அர்ஜூன மூர்த்தி மேற்கொண்ட கண்காணிப்பு பணியில் உண்மையில் உழைக்கும் நிர்வாகிகள், ஏமாற்றுபவர்கள், கல்லா கட்டுபவர்கள், எப்படி அரசியல் செய்வது என்று தெரியாமல் இருப்பவர்கள் என ஒரு பட்டியல் தயாராகியுள்ளது.

இந்த பட்டியலின் அடிப்படையிலும் மாவட்ட வாரியாக புதிய நிர்வாகிகளை நியமிக்கவும் தற்போது ரஜினி ஆயத்தமாகியுள்ளார். அதோடு மட்டும் அல்லாமல் தமிழகம் முழுவதும் திமுக, அதிமுக பாணியில் மாவட்டங்களை இரண்டாகவும், மூன்றாகவும், சில இடங்களில் நான்காகவும் பிரித்து மாவட்டச் செயலாளர்களை நியமிக்க ரஜினி திட்டமிட்டுள்ளார். இது குறித்து சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நேற்று ரஜினி இரண்டு மணி நேரம் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது எதிர்பார்த்த அளவிற்கு செயல்பாடுகள் இல்லாத ரசிகர் மன்ற நிர்வாகிகளை ரஜினி நேரடியாக தொலைபேசியில் அழைத்து பேசியதாக கூறுகிறார்கள்.

மேலும் ரசிகர் மன்றம் வேறு அரசியல் கட்சி வேறு திமுக – அதிமுகவை எதிர்த்து அரசியல் செய்ய உங்களிடம் மேலும் நான் அதிகம் எதிர்பார்க்கிறேன் என்று சிலரிடம் கூறியுள்ளார். வேறு சிலரிடமோ எதிர்பார்த்த அளவிற்கு  உங்கள் செயல்பாடு இல்லை என்று நேரடியாகவே அதிருப்தியை வெளியிட்டுள்ளார். சிறப்பாக செயல்பட்டு வரும் மாவட்டச் செயலாளர்களை ரஜினி பாராட்டியதாகவும் சொல்கிறார்கள். அத்தோடு மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமிக்கவும், புதிய மாவட்டச் செயலாளர்களையும் தேர்வு செய்யவும் ஒரு குழுவை ரஜினி அமைத்துள்ளாராம்.

அர்ஜூனமூர்த்தி, தமிழருவி மணியன், சுதாகர் ஆகியோர் அடங்கிய இந்த குழு தான் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய உள்ளதாம். தற்போதைக்கு மாவட்டச் செயலாளர்கள் யாரையும் ரஜினி சீண்டப்போவதில்லையாம். கட்சி ஆரம்பிக்கும் நாளன்றே புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு அதிரடி காட்டுவதே ரஜினியின் திட்டமாம். எனவே செயல்படாத மாவட்டச் செயலாளர்கள் இப்போது பெட்டி, படுக்கையோடு தயாராக இருக்கலாம்.