பாஜகவின் வெற்றிக்கும், மோடி இரண்டாவது முறையாக பிரதமர் பதவி ஏற்பதற்கும் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார் ரஜினி.  இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளதாகவும், நேரு, இந்திரா, வாஜ்பாய் வரிசையில் மோடி தலைவராக உருவெடுத்துள்ளார். நாடு முழுவதும் மோடி அலை வீசியதால் பாஜக வெற்றி பெற்றது என்றெல்லாம் பேசி புகழ்ந்துள்ளார். 

ஏற்கெனவே மோடி ஆதரவால் ரஜினி அரசியலுக்கு இழுத்து வரப்படுகிறார். தமிழகத்தில் ரஜினி பாஜகவின் முகமாக மாறப்போகிறார் என்றெல்லாம் தகவல்கள் பரவி வருகின்றன. உண்மையில் ரஜினிகாந்த் பாஜக அடிவருடியாக மாறிவருகிறாரா? தமிழக அரசியலில் அடுத்து ரஜினியின் அரசியல் எப்படிப்பட்டதாக இருக்கும் என அவரது ரசிகரான ரைட் பாண்டி என்பவர் அலசி ஆராய்ந்து பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், ’’ரஜினிகாந்த் அவர்கள் எடுத்த அரசியல் நிலைப்பாடுகள் ஒருபோதும் அவருடைய சொந்த நலனுக்காக இருந்தது இல்லை. ரசிகர்களை பணயம் வைத்தும் எந்த செயலிலும் இறங்கியதும் இல்லை. மக்களின் குரலாக, மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிப்பவராகவே இருந்தது தான் ரஜினிகாந்த் அவர்களின் சிறப்பு.

கிட்டத்தட்ட 40 ஆண்டுகாலமாக ஒரு அமைப்பைச் சார்ந்தவர்கள், தாங்கள் உழைத்து சம்பாதித்த பணத்திலிருந்து தங்களால் முடிந்த வகையில் ஏழை எளியவர்கள் பயன்படும் வகையிலான நலத்திட்டங்களை செய்து வருகிறார்கள். வட்டச் செயலாளர், மாவட்டச் செயலாளர் என்ற பதவிகளில் இருந்தாலும், அரசியல்வாதிகள் போல் பந்தா செய்யாமல், அவர்கள் அமைப்பைச் சார்ந்தவர்களுடன் நட்பு ரீதியாக, குடும்பமாக பழகி வந்தவர்கள்.

மிகவும் முக்கியமாக இஸ்லாமிய, கிறித்தவ, இந்துக்கள் என அனைத்து தரப்பு மக்களும் சாதி, மத வேறுபாடு இல்லாமல் ஒன்றாக இணைந்து செயல்பட்டு வந்த அமைப்பு அது.ன்தங்கள் தலைவரின் பிறந்த நாளுக்கு கோவிலில் தங்கத்தேர் இழுக்க இஸ்லாமிய, கிறித்துவர்களும் மகிழ்ச்சியுடன் கலந்து கொள்வார்கள். இந்து, கிறித்தவ, இஸ்லாமிய விழாக்களில் பரஸ்பர அன்புடன் குடும்ப உறுப்பினர்களாக மத வேறுபாடின்றி இணைந்து கொண்டாடி வந்தவர்கள். அரசியல் ஆதாயம் எதுவும் தேடாமல், மதநல்லிணக்கம் என்பதை உணர்வுப் பூர்வமாக ‘அனைவரும் சகோதரர்கள்’ என்ற அன்பு மழையைப் பொழிந்தவர்கள்.

“தானாகச் சேர்ந்த கூட்டம், அன்பால சேர்ந்தக் கூட்டம்” என்று அவர்களுடைய தலைவர் ரஜினிகாந்தால் வழிமொழியப்பட்ட ரஜினி ரசிகர் மன்றத்தைச் சார்ந்தவர்கள்தான் நாம் மேலே குறிப்பிட்டவர்கள். தமிழக அரசியலில் இறங்குவது உறுதி என்று ரஜினிகாந்த் அவர்கள் அறிவித்ததும் அக மகிழ்ந்து, அவருடைய வெற்றிக்காக பூத் கமிட்டி அமைக்க பம்பரமாகச் சுழன்றவர்கள்தான்.

ரஜினிகாந்த் அவர்களின் சிறப்பே, அவர் அனைவருக்கும் பொதுவானவராகவும், தன்னுடைய ரசிகர்களை நல்ல சிந்தனையுடன், சொந்த வாழ்க்கையில் முன்னேறுவதற்கு ஆசானாக விளங்கியதும் தான். அதனால் தான் ரஜினி ரசிகரின் பெற்றோரும் அவருக்கு ரசிகர்களாகிப் போனார்கள். பெண்களின் ஆதர்ச நாயகனாகவும் உருவானார். அவர் நடித்த சினிமாக்களைப் பார்த்து ரசிகரானவர்களுக்கு இணையாக, எல்லோருக்கும் பொதுவான ஒரு நல்ல மனிதனாக அவருக்கு ரசிகரானவர்களும் உண்டு என்பது தான் உண்மை.

1996ம் ஆண்டு முதல் ரஜினிகாந்த் அவர்கள் எடுத்த அரசியல் நிலைப்பாடுகள், அவருடைய சொந்த நலனுக்காக இருந்தது இல்லை. ரசிகர்களை பணயம் வைத்தும் எந்த செயலிலும் இறங்கியதும் இல்லை. மக்களின் குரலாக, மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிப்பவராகவே இருந்ததுதான் ரஜினிகாந்த் அவர்களின் சிறப்பு.

நடந்து முடிந்த தேர்தலில் கூட எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்ற திடமான முடிவுடன், நதி நீர் இணைப்பு என்று அவர் 18 ஆண்டுகளாக வலியுறுத்திவரும் தீர்வை யார் முன்னெடுக்கிறார்களோ அவர்களுக்கு ஆதரவு அளிக்கக் கேட்டுக் கொண்டார். புதிய கருத்து எதையும் முன் வைக்கவில்லை. தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். எல்லாக் கட்சிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு நதிநீர் இணைப்பை வாக்குறுதியாக சேர்த்தது, ஒரு தேர்தல் வரலாறாக இடம்பெற்றுள்ளது.

நிற்க. இதெல்லாம் இப்போ எதற்காக? நடந்த தேர்தலிலும், மத்தியில் பாஜக கூடுதல் வெற்றி பெற்ற பிறகும் ரஜினி ரசிகர்களில் ஒரு சாரார் பாஜகவின் பிரச்சார பீரங்கியாகவே மாறியுள்ளதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது. ரஜினிகாந்த் அவர்களே பிரதமர் மோடி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து விட்டாரே என்று இவர்கள் வாலண்டியராக பாஜக வண்டியில் ஏறுகிறார்கள் போலிருக்கு. ரஜினிகாந்த் அவர்களுக்கு அரசியலில் முதல் எதிரி திமுகவும் அதன் தலைவர் மு.க.ஸ்டாலினும் தான்.

நண்பர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்வதால், அரசியலில் இருவரும் ஓரணியில் சேர முடியுமா? அது தானே பாஜகவுக்கும் பிரதமர் மோடிக்கும் பொருந்தும். பின்னே, ஏன் இவர்கள் பாஜகவுக்காக வாலண்டியராக ஆஜர் ஆகிறார்கள்?. இவர்கள் உண்மையிலேயே ரஜினி ரசிகர்களா? அல்லது ரஜினி ரசிகர்கள் என்ற போர்வையில் நடமாடும் பாஜகவினரா? சமூகத் தளங்களில் ரஜினி ரசிகர்கள் பாஜகவுடன் ஐக்கியமாகி விட்டது போல் ஒரு பிம்பம் உருவாகியுள்ளது. ஜெயலலிதா அம்மையார் இருக்கும் வரையிலும் அதிமுகவினர் யாராவது பிரதமர் மோடியை டாடி என்று சொன்னார்களா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
 
அரசியல் ரீதியாகப் பார்த்தால் பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் இருக்கிறது. தனிக்கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்று ரஜினிகாந்த் அவர்கள் உறுதியாகக் கூறிவிட்டார். ஆக, பாஜக-அதிமுக கூட்டணியில் ரஜினி கட்சி சேரப்போவதில்லை. ஆனால் பாஜக-அதிமுகவும் தேர்தல் களத்தில் இருக்கும். திமுகவும் இருக்கும். ரஜினிகாந்த் அவர்களின் புதிய கட்சியும் எழுச்சியுடன் களம் காணும். இந்த அரசியல் சூழலில் ரஜினி ரசிகர்கள் பாஜகவுக்கு ஆதரவாக இருப்பது எந்த விதத்திலாவது பயன் தருமா? அல்லது ஆபத்தாக முடியுமா? என்பதே கேள்வி!.

நாட்டின் வளர்ச்சி, பாதுகாப்பு என்றெல்லாம் சொன்னாலும், பாஜக இந்துத்துவா என்ற மத அடிப்படையிலான கட்சி என்பது உலகம் அறிந்த ஒன்று. மதவாத்தை முன்னிறுத்தியே தேர்தலை சந்தித்து வடநாட்டில் வெற்றி பெற்றுள்ளார்கள். தெற்கே மதவாதத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழ்நாடு என்பது ஏழு வண்ணங்கள் கொண்ட வானவில் போன்றது. ஆனால் அதில் காவிக் கலருக்கு இடம் இல்லை என்பதை தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளது.

“ரஜினி ரசிகர்கள் அல்லது ரஜினி ரசிகர்கள் போர்வையில் இருப்பவர்களின் பாஜக பாசம், கிறித்தவ, இஸ்லாமிய ரசிகர்களையே விலகிப் போகச் செய்ய வழி வகுக்கிறது. ரசிகர்களுக்குள்ளாகவே பிளவு ஏற்படவும் வழி செய்துள்ளது. மதநல்லிணக்கத்தோடு சேர்ந்து இருந்தவர்களை மத ரீதியாக பிரிக்கும் செயலாகவும் மாறிவிட்டது. பாஜகவை ஆதரிக்கும் ரசிகர்களிடமிருந்து இஸ்லாமிய, கிறித்தவ சிறுபான்மை இன ரசிகர்கள் விலகுவதையும் காணமுடிகிறது,” என்ற நடுநிலைக் குரல்களைப் புறக்கணிக்க முடியாதல்லவா

ரஜினிகாந்த் அவர்கள் அறிமுகப்படுத்திய மன்ற சின்னத்தில் பாம்பு படம் இருப்பது கிறித்தவர்களுக்கு வருத்தமளிக்கிறது என்று தூத்துக்குடியில் நடந்த முதல் ரஜினி மக்கள் மன்றக் கூட்டத்திலேயே எடுத்துச் சொல்லப்பட்டது. அடுத்த நாளே பாம்பு படத்தை நீக்கினார் ரஜினிகாந்த். அவர் அனைவருக்கும் பொதுவானவர் என்பதை தெள்ளத் தெளிவாக வலியுறுத்தும் வகையில் அது இருந்தது.

“ரஜினி மக்கள் மன்றக் காவலர்கள் எந்த கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்காமல் தலைவர் நேரடி அரசியலில் ஈடுபடும் வரை அமைதி காப்பதே நல்லது. அதிலும் தமிழகத்தில் பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்படுவது தலைவரின் அரசியல் வெற்றிக்கு மிகப்பெரிய தடையாக, பின்னடைவாக அமையும். தமிழகத்தில் மதவாதம் ஒருபோதும் எடுபடாது. அப்படி மதவாத கட்சிகள் தமிழகத்தில் கோலோச்சும் போது தமிழகம் நிம்மதியற்ற மாநிலமாகிவிடும். நாம் அனைவருக்கும் பொதுவான அரசியலையே முன்னெடுப்போம், வெற்றி பெறுவோம், தலைவரை அரியணையில் அமர வைப்போம். மதவாத பாஜகவுக்கு அளிக்கும் ஆதரவு என்பது மதநல்லிணக்க அமைப்பான ரஜினி ரசிகர்களுக்குள் பிளவை ஏற்படுத்தும் செயல் என்பதை ரசிகர்கள் உணர்ந்து செயல்பட்டால் நல்லது’’ என ரைட் பாண்டி தெரிவித்துள்ளார்.