நடிகர் ரஜினிக்கு எதிராக வருமான வரித்துறை தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த சம்பவத்தை வைத்து #வரிஏய்ப்புரஜினி என்கிற ஹேஷ்டேக் சமூகவலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

2002 முதல் 2005 வரையிலான வருமான வரி மதிப்பீடு தொடர்பாக நடிகர் ரஜினிக்கு 66 லட்சம் ரூபாய் வருமான வரித்துறை அபராதம் விதித்தது. இதை எதிர்த்து ரஜினி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது; இம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் ரஜினி மனு தாக்கல் செய்தார்.

எந்தவித ஆதாரமும், விசாரணை ஏதும் நடத்தாமல் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக கூறி வருமான வரித்துறை உத்தரவை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ரத்து செய்தது. தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரி ஆணையர் மனு தாக்கல் செய்தார். இம்மனு நீதிபதிகள் வினீத் கோத்தாரி ஆர்.சுரேஷ்குமார் அடங்கிய 'டிவிஷன் பெஞ்ச்' முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

வருமான வரித்துறை சார்பில் வழக்கறிஞர் சுவாமிநாதன் ''வருமான வரித்தொகை 1 கோடி ரூபாய்க்கு மிகாமல் இருந்தால் மேல்முறையீடு செய்ய வேண்டாம் என மத்திய நேரடி வரி வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் 3 ஆண்டுகளுக்கும் சேர்த்தே 1 கோடி ரூபாய்க்கு குறைவாக வருவதால் வழக்கை வாபஸ் பெறுகிறோம்'' என்றார். இதையடுத்து வருமான வரித்துறை வழக்கறிஞரின் வாதத்தை பதிவு செய்து ரஜினிக்கு எதிராக தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இந்த சம்பவத்தை வைத்து #வரிஏய்ப்புரஜினி என்கிற ஹேஷ்டேக் சமூகவலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.