அமைச்சர்கள் 10 பேரை அழைத்து தனித்தனியாக பேசி அனுப்பியுள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

திடீரென நேற்று முன் தினம் முதலமைச்சரின் உதவியாளர்கள் தரப்பிடம் இருந்து 10 அமைச்சர்களுக்கு அவசர தகவல் சென்றுள்ளது. ஆளுக்கு 15 நிமிடம் என சுமார் இரண்டரை மணி நேரம் இதற்காக முதலமைச்சர் ஒதுக்கியுள்ளார். அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, செல்லூர் ராஜூ, துரைக்கண்ணு, காமராஜ், ஓ.எஸ்.மணியன், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி என இந்த பட்டியலில் உள்ளாட்சித் தேர்தலில் தோல்வி அடைந்த மாவட்டங்களின் அமைச்சர்களும் இடம் பெற்று இருந்தனர்.

அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி மற்றும் செல்லூர் ராஜூவிடம் ரஜினி விஷயம் குறித்து பேசியுள்ளார் எடப்பாடியார். என்ன பேசினாலும் பத்திரிகைகாரங்க திரிச்சிடுவாங்க, நீங்க என்ன காரணத்துக்காக சொன்னீங்களோ அதை மாத்திடுவாங்க. ரஜினி பத்தி என்ன பேசுனாலும் பெருசாகிடும். அதனால அவர பத்தி பேசுறதை நிறுத்திடுங்க. தேவையில்லாமல் நாம ஏன் அவருக்கு விளம்பரம் கொடுக்கணும் என இரண்டு பேரிடமும் பேசியுள்ளார். மேலும் பெரியார் விவகாரத்தில் ரஜினியின் மகள் 2வது திருமண விஷயத்தை இழுத்தது சரியில்லை என்றும் செலலூர் ராஜூவிடம் கறார் காட்டியுள்ளார் எடப்பாடியார்.

இதே போல் காவிரி டெல்டா மாவட்ட அமைச்சர்களிடம் எடப்பாடியார் சற்று கடுமை காட்டியதாக சொல்கிறார்கள். விவசாயிகளுக்கு என்று எவ்வளவோ செய்தும் நாம் அங்கு தோற்க காரணம் என்ன? நாம் செய்தது மக்களிடம் சென்று சேரவில்லையா? என லெப்ட் அன்ட் ரைட் வாங்கியதாகவும் கூறுகிறார்கள். மேலும் ஆட்சியை இன்னும் ஓராண்டுக்கு மட்டும் நடத்தினால் போதும் என்று நினைக்காதீர்கள், நிச்சயம் நாம் மீண்டும் ஆட்சிக்கு வர முடியும் அதற்கு நாம் உண்மையாக உழைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அத்தோடு கட்சிக்காரர்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்த அமைச்சர்கள் ஒன்று இரண்டு பேரிடம் நேரடியாகவே பிரச்சனையை கூறியுள்ளார். கட்சிக்காரர்களை அனுசரிக்கவில்லை என்றால் அமைச்சர் பதவியில் நீடிக்க முடியாது என்று வெளிப்படையாக கூறியதாகவும் சொல்கிறார்கள். அதிலும் வடமாவட்ட அமைச்சர் ஒருவருக்குத்தான் செம டோஸ் என்கிறார்கள். உங்கள் மாவட்ட எம்எல்ஏக்களை நானும், சிவி சண்முகமும் மாத மாதம் அழைத்து பேசிக் கொண்டு இருக்கிறோம், ஆனால் நீங்கள் உங்கள் மகன் பிறந்த நாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கடுகடுத்ததாக கூறப்படுகிறது.

அமைச்சர்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு அவதாரம் என தசாவதாரத்தில் எடப்பாடியார் செயல்பட்டதாகவும், ஒரு தேர்ந்த அரசியல்வாதி போன்ற எடப்பாடியாரின் அப்ரோச் அமைச்சர்கள் சிலரை உலுக்கிவிட்டதாகவும் அவர்கள் புலம்ப ஆரம்பித்துள்ளதாகவும் கோட்டை வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.