ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று 47 நாட்களாக அவதிப்பட்டு போராடிக்கொண்டிருக்கும் போது, தொழிற்சாலை நடத்த அனுமதி கொடுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது புரியாத புதிராக உள்ளது என நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி சிப்காட்டில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூட வலியுறுத்தி குமரெட்டியாபுரம் மக்கள் 47 நாட்களாக போராடி வருகின்றனர். அந்த ஆலையிலிருந்து நச்சுவாயு வெளியேறுவதால், மூச்சுத்திணறல், தொண்டை எரிச்சல், கண் பார்வை குறைபாடு உள்ளிட்ட பல நோய்களுக்கு அக்கிராம மக்கள் ஆளாகியுள்ளனர்.

மக்களின் உடல் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும் வகையில் அமைந்துள்ள அந்த ஆலையை மூட வேண்டும் என வலியுறுத்திவருகின்றனர். ஏற்கனவே இருக்கும் ஆலையை மூட வேண்டும் என வலியுறுத்தப்படும் நிலையில், ஆலை விரிவாக்கப் பணிகள் தொடங்கப்பட்டதால் கொந்தளித்த மக்கள், தீவிரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதைதொடந்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை கலந்துகொள்ள உள்ளதாக தெரிவித்தார். 

இந்நிலையில், ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று 47 நாட்களாக அவதிப்பட்டு போராடிக்கொண்டிருக்கும் போது, தொழிற்சாலை நடத்த அனுமதி கொடுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது புரியாத புதிராக உள்ளது என நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.