பெரியார் குறித்து அவதூறாக பேசியதற்கு ரஜினி வருத்தம் தெரிவிக்க வேண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த ‘துக்ளக்’ விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது சர்ச்சையானது. ”முரசொலி வைத்திருந்தால் திமுக காரர் என்றும்  துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்றும் சொல்வார்கள் என்று பேசிய ரஜினி, பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவப்படங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது என்றும் செருப்பு மாலை போடப்பட்டது என்றும் அப்போது ரஜினி பேசினார். 
ரஜினியின் இந்தப் பேச்சுக்கு திகவின் பூங்குன்றனார் மறுப்பு தெரிவித்தார். பெரியார் பற்றி தவறாகப் பேசியதற்கு ரஜினி நிபத்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை வெளியிட்டார். திவிக கோவை கிளையினர் ரஜினி மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி போலீஸில் புகார் அளித்தனர்.


இந்நிலையில் பெரியார் பற்றி சர்ச்சையாகப் பேசியதற்கு ரஜினி வருத்தம்  தெரிவிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “சங்பரிவாரின் சதிக்கு ரஜினி பலியாகமல் இருக்க வேண்டும். சமூகநீதி கோணத்தில் பெரியாரை பார்த்தால் அவருடைய போராட்டங்களை ரஜினி புரிந்துகொள்ள முடியும். பெரியார் குறித்து அவதூறாக பேசியதற்கு ரஜினி வருத்தம் தெரிவிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.