காவிரி மேலாண்மை வாரியம் ஒன்று மட்டுமே  நாம் ஏற்றுக்கொள்ள கூடிய நியாயமான தீர்வாக இருக்க முடியும் என ரஜினி காந்த் தெரிவித்துள்ளார். 

கடந்த வருடம் டிசம்பர் 31 ஆம் தேதி தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்த நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி, மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமித்து வருகிறார். 

அவ்வப்போது அரசியல் குறித்து தனது கருத்துக்களையும் கூறி வருகிறார். விரைவில் அரசியல் கட்சியின் பெயரையும் கொடியையும் அறிமுகம் செய்யப்படும் என்று செய்திகள் வெளியாகி இருந்தன. வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி அன்று கட்சியின் பெயர், கொடி அறிமுக செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில்தான், கடந்த 10 ஆம் தேதி அன்று ஆன்மீக பயணமாக ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்றார். ரிஷிகேஷ் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று அங்குள்ள ஆன்மீக தலங்களில் வழிபாடு நடத்தினார். அங்குள்ள ஆன்மீக குருக்களையும் சந்தித்து பேசி வந்தார்.

இந்த நிலையில் தனது ஆன்மீக பயணத்தை முடித்துக் கொண்டு நடிகர் ரஜினிகாந்த்  சென்னை திரும்பினார். ஆன்மீக பயணம் மனதுக்கு புத்துணர்ச்சியாக உள்ளது என்று கூறினார். 

இதைதொடர்ந்து ரஜினி மன்ற நிர்வாகிகள் தேர்வுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் காணொளி காட்சி மூலம் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார். அதில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவோம். பிற மாநிலத்தவர்கள் வியந்து பார்க்கும் வகையில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதே நோக்கம் என்றார்.

இதனிடையே காவிரி பிரச்சனையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து அறிவிப்பு வெளியிட இன்றே மத்திய அரசுக்கு கடைசி நாள். 

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தமது டுவிட்டர் பக்கத்தில் காவிரி மேலாண்மை வாரியம் ஒன்று மட்டுமே  நாம் ஏற்றுக்கொள்ள கூடிய நியாயமான தீர்வாக இருக்க முடியும் என தெரிவித்துள்ளார். இது அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் பூரிப்பை ஏற்படுத்தியுள்ளது.