கட்சி ஆரம்பிக்கப்போவதாக ராகவேந்திரா திருமண மண்டபத்தில் அறிவித்த போதே 2021ம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் தனித்து 234  வேட்பாளர்களை களமிறக்குவேன் எனத் தெளிவாக அறிவித்தார். அடுத்து ரஜினி மக்கள் மன்றத்தை தொடங்கி நிர்வாகிகளையும், மன்றத்தையும் கட்டமைத்து வருகிறார். இந்நிலையில் ரஜினிகாந்த் பாஜக கட்சியில் சேரப்போகிறார் என்றும், கட்சி ஆரம்பித்து பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்போகிறார் என்றும் பேச்சுகள் எழுந்து வந்தன. 

இதனிடையே ரஜினி பாஜகவுக்கு வரவேண்டும் என அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் வெளிப்படையாகவே அழைப்பு விடுத்து வந்தனர். அதனை மேலும் சாயம் பூசும் வகையில் பாஜக ரஜினிக்கு பத்மபூஷன், பத்ம விபூஷன், சில நாட்களுக்கு முன்னர் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் எனக் கொடுத்து வந்தது. கடந்த மக்களவை தேர்தலில் நதிநீர் இணைப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்சிகளுக்கே ஆதரவு என கூறியிருந்தார். அத்தோடு பாஜக நடத்தும் விழாக்களிலும் ரஜினிகாந்த் கலந்து கொண்டு வந்தார். இதுவும் ரஜினி பாஜக ஆதரவாளராக இருப்பாரோ என்கிற சந்தேகத்தை கிளப்பியது. 

இது ஒருபுறம் இருக்க, ரஜினி அரசியலுக்கு வருவதற்கு முன்பே, திமுக அவர் மீது மதவாதி என்கிற சாயத்தை பூசி வந்தது. ரஜினியை பாஜக ஆதரவாளராக சித்தரித்து வந்தது. அவர் பாஜக ஆதரவாளராக இருப்பதால் மக்களுக்கு அவர் மீது அதிருப்தி ஏற்படக்கூடும் என திமுக எதிர்பார்த்தது. ஆனால், பாஜக, திமுகவின் எதிர்பார்ப்புகளை ஒரே ஒரு பேட்டி மூலம் தெளிவுபடுத்தி விட்டார் ரஜினி.

ரஜினிகாந்த், எனக்கும் திருவள்ளுவருக்கும் காவி சாயம்பூச முயற்சி நடக்கிறது அது நடக்காது. தம்மை பாஜக உறுப்பினராக நிறுவ முயற்சி நடக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது அது நடக்காது.  திருவள்ளுவருக்கு காவி அணி உடை அணிவித்தது அவர்களது தனிப்பட்ட விருப்பம். திருவள்ளுவருக்கு காவி பூசியது போல எனக்கும் காவி பூச பார்க்கிறார்கள்; திருவள்ளுவரும் மாட்ட மாட்டார், நானும் மாட்ட மாட்டேன்.

 

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை.  பாஜக எனக்கு எந்த அழைப்பும் விடுக்கவில்லை.  நான் பாஜகவை சேர்ந்தவன் என்றும், பாஜக தலைவராக வருவேன் என்றும் நிறுவ முயற்சிக்கிறார்கள்.  சிறப்பு விருது அறிவித்தவர்களுக்கு நன்றி. வள்ளுவர் நாத்திகர் அல்ல ஆத்திகர். கடவுள் நம்பிக்கை கொண்டவர். பேச வேண்டிய விஷயங்களை விட்டு விட்டு திருவள்ளுவர் பற்றி இவ்வளவு பெரிய சர்ச்சை கிளப்பியது அர்ப்பத்தனமானது.  திருவள்ளுவர் போன்ற ஞானிகள் சாதி மதத்திற்கு அப்பாற்பட்டவர்கள். ’’என அவர் பேசி இருப்பது பாஜகவுக்கு மரண அடியாகவும், திமுகவுக்கு நெத்தியடியாகவும் அமைந்து விட்டது.

இந்த பேட்டியின் மூலம் குழப்பத்தில் இருந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும் தெளிவடைந்து உற்சாகி இருக்கின்றனர். ஆக தனது வழி தனி வழி என்பதை அழுத்தம் திருத்தமாக கூறி இருக்கிறார் ரஜினி.