ரஜினியின் அறிக்கையை தங்களுக்கு சாதகமானதாக அதிமுக - பாஜகவினர் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை.. “எந்தக் கட்சிக்கும் ஆதரவு கிடையாது.. தன் பெயரை யாரும் பயன்படுத்தக் கூடாது...  தண்ணீர் பிரச்னையைத் தீர்க்கும் திட்டங்கள் வைத்திருக்கும் கட்சிக்கு ஓட்டளியுங்கள்” என்று ரஜினி நேற்று அறிவித்தார். பாஜக ஆதரவு முத்திரை ரஜினி மீது தொடர்ந்து இருப்பதால், அதை தவிர்க்கும் விதமாகவே ரஜினி அறிக்கை வெளியிட்டதாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் சிலர் உறுதிப்படுத்தினர்.

 

ஆனால், ரஜினி அறிக்கையை தங்களுக்கு சாதகமாக அதிமுக - பாஜக பார்க்கத் தொடங்கியுள்ளார்கள். ரஜினி அறிக்கை பாஜகவுக்கு பின்னடைவா என்பது பற்றி பாஜக மாநில தலைவர் தமிழிசையிடம் கேள்வி எழுப்பியபோது, “ரஜினி அறிக்கையை நேர்மறையாகப் பார்க்கிறேன். வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலேயே நதி நீர் இணைப்புக்காக ஒரு கோடி ரூபாய் தருவதாக சொன்னவர் ரஜினி” என்று தமிழிசை தெரிவித்திருக்கிறார். 

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத், “நதி நீர் இணைப்புத் திட்டத்தை பா.ஜ.க.த்தான் பேசிக்கொண்டு இருக்கிறது. தற்போதுகூட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி காவிரி - கோதாவரி இணைப்பு பற்றி பேசிவருகிறார்” என்று தெரிவித்திருந்தார்.

 

இவர்களைத் தாண்டி ரஜினி அறிக்கையை வைத்து தமிழக அமைச்சர் உதயகுமார் தெரிவித்த கருத்துதான் ஹைலைட். “ தடையில்லா குடிநீர், மின் சப்ளைக்கு தேவையான நடவடிக்கைகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எடுத்து வருகிறார். புதிய குடிநீர் ஆதாரங்கள் கண்டறியப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கண்மாய்கள், ஆறுகள் துார் வாரப்படுகின்றன. அதை கவனித்து, நடிகர் ரஜினி அறிக்கை வெளியிட்டிருக்கலாம். தண்ணீர் பிரச்னையைத் தீர்ப்பவர்களை, தேர்தலில் ஆதரிக்குமாறு நடிகர் ரஜினி கூறிய கருத்து, அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக உள்ளது.” என்று தடாலடியாகக் கூறியிருக்கிறார்.