ரஜினி யாரோ சொல்வதை கேட்டுப் பேசுகிறார். விளக்கம் கேட்டால் பதிலளிப்பதில்லை. இதனால் குழப்பமே மிஞ்சுகிறது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தனியார்  தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், “ரஜினி மீது நாங்கள் மிக மிக மரியாதை வைத்திருக்கிறோம். அவர் விஜயகாந்தின் நெருங்கிய நண்பர். எங்களுக்கு அவர் மீது மிகுந்த மரியாதை உண்டு. அரசியலில் எப்படி இருப்பார், அவர் வருவாரா, இல்லையா? வந்தால் அவருடன் கூட்டணி வைப்போமா? என்கிற கேள்விக்கு இப்போது எங்களிடம் பதில் இல்லை.

முதலில் அவர் அரசியலுக்கு வரட்டும். ஏனென்றால் இப்போதைக்கு அவர் நடிகர் மட்டுமே. அதனால் இந்தக் கேள்விக்கே இப்போதைக்கு இடமில்லை. அரசியல்வாதியாக ரஜினி எப்படி இருப்பார் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. ரஜினி சொல்கிற கருத்துகள், அரசியல் ரீதியான கருத்துகள் அவரின் சொந்தக் கருத்தா? என்பதைவிட யாரோ சொல்கிறார்கள், அதை அவர் சொல்கிறார். அதற்கான விளக்கத்தை திருப்பிக் கேட்கும்போது அதற்கான முழு விளக்கத்தையும் அவர் சொல்வது கிடையாது.

இது என்ன ஆகிறது என்றால், அதுகுறித்து மற்றவர்கள் பேசிப்பேசி பெரிதாகிக்கொண்டே போகிறதே தவிர இதற்கான தீர்வு என்ன என்பதை அவர்தான் சொல்ல வேண்டும்”என அவர் தெரிவித்தார். பாஜக கூட்டணியில் இருக்கிறது தேமுதிக. ரஜினி பேசுவது பாஜகவில் குரல் என விமர்சனம் முன் வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரஜினிகாந்த் யாரோ சொல்வதை கேட்டு பேசுவதாக பிரேமலதா கூறுவது  அவர் பாஜக கூட்டணியில்தான் இருக்கிறாரா? அல்லது அடுத்து வரும் சட்ட மன்றத்தேர்தலில் கூட்டணி மாறுவதற்காக இப்படி பேசுகிறாரா? என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது. அதேபோல் நேற்றைய தமிழக பட்ஜெட்டை பற்றி விமர்சித்துள்ள விஜயகாந்த் ஒன்றுக்கும் உதவாத பட்ஜெய் எனக் கூறியிருந்தார்.

 

அதற்கு முன் ஒரு நிகழ்ச்சியில் பேசிய பிரேமலதா, ‘2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக முதல்வர் பதவியை பிடிக்கும்’எனத் தெரிவித்திருந்தார். இதுவும் தேமுதிக கூட்டணி நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளுமா என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.