ரஜினி மக்கள் மன்றம் மற்றும் ரஜினி அரசியல் புரட்சி என்று சன் நியூஸ் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் ஹேஸ்டேக்குடன் செய்த ட்வீட் மு.க.ஸ்டாலினை கடுப்பாக்கியுள்ளது. ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் நீக்கப்பட்டதால் கடும் அதிருப்தி எழுந்தது. மேலும் ரஜினிக்கு தெரியாமலேயே நிர்வாகிகளை மக்கள் மன்றத்தின் அமைப்பாளர் இளவரசன் நீக்குவதாகவும் புகார் கூறப்பட்டது. 

ஆனால் இதனை எல்லாம் மறுத்து ரஜினி கடந்த 26ந் தேதி ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் தனக்கு தெரியாமல் மக்கள் மன்றத்தில் நிர்வாகிகள் நியமனம் மற்றும் நீக்கம் நடைபெறுவது இல்லை என்று அவர் திட்டவட்டமாக கூறியிருந்தார். மேலும் புதிய அரசியல் மாற்றத்திற்காகவே தான் கட்சி துவங்க உள்ளதாகவும் வழக்கமான அரசியலில் ஈடுபட தான் தயாராக இல்லை என்றும் ரஜினி கூறியிருந்தார். இதனை தொடர்ந்து ரஜினி ரசிகர்களும், ஆதரவாளர்களும் ட்விட்டரில் ரஜினியின் அறிக்கையை ட்ரென்ட் ஆக்கினர். இதற்காக ரஜினி மக்கள் மன்றம் மற்றும் ரஜினி அரசியல் புரட்சி என்று இரண்டு ஹேஸ்டேக்குகள் உருவாக்கப்பட்டன. 

ரஜினி ரசிகர்கள் இந்த ஹேஸ்டேக்கை பயன்படுத்தி டிரென்டிங் செய்து கொண்டிருந்த நிலையில் சன் நியூஸ் தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ பக்கத்திலும் ரஜினி மக்கள் மன்றம் மற்றும ரஜினி அரசியல் புரட்சி ஆகிய ஹேஸ்டேக்குகள் பயன்படுத்தப்பட்டன. இதனை ரஜினி ரசிகர்கள் ஸ்க்ரீன் சாட் எடுத்து சன் நியூசே நமக்கு ஆதரவாக இருப்பதாக விளம்பரம் செய்ய ஆரம்பித்தனர். 

இதனால் கடுப்பான தி.மு.கவினர் சன் நியூசின் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு சென்று திட்டித் தீர்த்தனர். இந்த நிலையில் இந்த நிகழ்வுகள் நடந்து சுமார் 5 நாட்களுக்கு பிறகு விவகாரம் மு.க.ஸ்டாலின் வரை சென்றுள்ளது. சன் நியூஸ் தொலைக்காட்சியில் ரஜினிக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வெளியாவதுடன், அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ரஜினி அரசியல் புரட்சி போன்ற வாசகங்களை பயன்படுத்துவதையும் ஸ்டாலினிடம் எடுத்துரைத்துள்ளனர்.

மேலும் ரஜினி அரசியல் புரட்சி என்கிற சன் நியுசின் ட்வீட் ஸ்க்ரீன் ஷாட் ஸ்டாலினிடம் காட்டப்பட்டுள்ளது. இதனை பார்த்து ஸ்டாலின் செம கடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.