சென்னையில் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற கலைஞர் நினைவேந்தல் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ரஜினி பேசிய பேச்சு அவரது அரசியல் ஆட்டத்திற்கான அச்சாணியாக பார்க்கப்படுகிறது. மாலை 6 மணிக்கு நினைவேந்தல் கூட்டம் துவங்கினால் ரஜினி எட்டு மணிக்கு பிறகே காமராஜர் அரங்கிற்கு வருகை தந்தார். நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கிற்கு வந்த ரஜினியை நாசர், விஷால் உள்ளிட்டோர் வரவேற்று மேடைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது மு.க.ஸ்டாலினும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார். மேடையில் கலைஞர் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய ரஜினி பின்னர் மெழுகுவர்த்தியும் ஏற்றினார்.

உடன் இருந்த மு.க.ஸ்டாலின் மெழுகுவர்த்தி ஏற்ற ரஜினிக்கு உதவினார். இதனை தொடர்ந்து ரஜினி பேசிய பேச்சு தான் தமிழக அரசியலின் புதிய சரவெடியாகிப்போனது. காலையில் மு.க.அழகிரி ஏற்படுத்திய பரபரப்பு அப்படியே ரஜினியின் பேச்சால் மலுங்கிப் போனது. பொதுவாக நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடைபெறும் கூட்டங்களில் ஆளும் கட்சியை யாரும் விமர்சிப்பது கிடையாது. ஏனென்றால் ஆளும் கட்சியின் தயவு இல்லாமல் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தால் செயல்பட முடியாது. ஆனால் இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல், ரஜினி எடுத்த எடுப்பிலேயே ஆளுங்கட்சிக்கு சவால் விடும் வகையில் பேசி அங்கு திரண்டிருந்தவர்களின் கிளாப்ஸ்களை அள்ளினார். முதலில் கலைஞருக்கு மெரினா கடற்கரையில் இடம் ஒதுக்கப்படாது குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் ரஜினி.

கலைஞருக்கு மெரினாவை ஒதுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு தான் தனக்கு நிம்மதி ஏற்பட்டதாக ரஜினி தெரிவித்தார். உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியிருக்குமானால், தானே போராட்ட களத்தில் இறங்கியிருப்பேன் என்று ரஜினி கூறிய போது அரங்கம் அதிர்ந்தது. அதுமட்டும் அல்லாமல் கலைஞர் அடக்கம் செய்யப்பட்ட போது மெரினாவிற்கு வராத முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் ஒரு பிடி பிடித்தார் ரஜினி. முன்னாள் பிரதமர் தேவகவுடா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோர் கலைஞரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்றதை ரஜினி சுட்டிக்காட்டினார். ஆனால் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏன் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்று அதிரடியாக ஒரு கேள்வியை எழுப்பினார் ரஜினி.

மேலும் எடப்பாடி பழனிசாமி என்ன தன்னை ஜெயலலிதாவாகவோ இல்லை எம்.ஜி.ஆராகவோ நினைத்துக் கொண்டு இருக்கிறாரா? என்றும் விளாசினார் ரஜினி. மேலும் ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் போன்ற கெப்பாசிட்டியில் தற்போது யாரும் இல்லை என்று தெரிவித்த ரஜினி கலைஞர் இறுதிச்சடங்கில் முதலமைச்சர் மட்டும் அல்லாமல் ஒட்டு மொத்த அமைச்சரவையும் பங்கேற்று இருக்க வேண்டும் என்றும் பேசினார். 

ரஜினியின் இந்த பேச்சு முழுக்க முழுக்க அரசியலாகவே பார்க்கப்படுகிறது. காரணம், அரசியல் பிரவேசம் என்று அறிவித்த பிறகு ரஜினி இப்போது தான் முதல் முறையாக முதலமைச்சருக்கு எதிராக நேரடியாக விமர்சனத்தை முன் வைத்துள்ளார். மேலும் கலைஞர் நினைவிட விவகாரத்திலும் தமிழக அரசை கடுமையாக சாடியுள்ளார். தான் போராடத் தயாரானதாகவும் ரஜினி கூறியுள்ளார். இதனை எல்லாம் வைத்து பார்க்கும் போது தீவிர அரசியலுக்கான அச்சாணியாக ரஜினி கலைஞர் நினைவேந்தல் கூட்டத்தை பயன்படுத்திக் கொண்டதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.